பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் கற்பனை உலகத்தில் வானத்திற்கு நிறமே கிடையாது. காலையில் சூரியனும் இரவில் நிலவும் நட்சத்திரங்களும் நிறமற்ற வானத்தில் உலாவி வந்தன. அங்கே ஓர் உயரமான,  பல நூறு உயிர்களின் வாழ்விடமாக மலை ஒன்று இருந்தது. அந்த மலையின் பெயர் நீல மலை. அந்த பெயருக்குப் காரணம் அந்த மலை எங்கும் பூத்திருக்கும் நீலநிறப்பூ. அந்த மலையின் அடிவாரத்தில் பல அழகான கிராமங்கள் இருந்தன. அந்த கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்கு எல்லாம் தேவதைப் பாட்டி என்றால் மிகவும் பிடிக்கும்.

தேவதைப் பாட்டிக்கும் அந்த குட்டிக் குழந்தைகள் மேல் கொள்ளைப் பிரியம். இரவெல்லாம் நிலவில் உட்கார்ந்து வடை சுட்டுக் கொண்டே இருப்பார். காலையில் தான் சுட்ட வடைகளை எடுத்துக் கொண்டு அந்தப் பெரிய  மலைக்கு வந்து விடுவார். குழந்தைகளும் வந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம்தான்.

காட்டுப்பூக்களைக் கொண்டு சரம் தொடுத்து, தேவதைப்பாட்டி குட்டிப் பையன்களுக்கும் பெண்களுக்கும் கிரீடம் செய்வாள். குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள்; ஒளிந்து பிடித்து விளையாடுவார்கள்; அருவியில் மேலிருந்து குதித்து மலையில் வளைந்து செல்லும் ஆற்றுக்குள் விழுவார்கள். இடையிடையே பாட்டியின் வடைகளைக் கொண்டு பசியாறுவார்கள்.

இந்த விளையாட்டுகளிலேயே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது மேகவேட்டை. அந்த மலையின் உச்சியில் பெரிய மரம் இருக்கும். அதன் உச்சியிலிருந்து எகிறி குதித்தால் பிடித்துவிடும் உயரத்தில் மேகங்கள் மிதந்து வரும். எகிறிக் குதிக்கும் குழந்தைகள் கையில் அகப்படும் மேகத்தைப் பிடித்துக் கொண்டு மீண்டும் அந்த மரத்தின் மற்றொரு கிளையிலேயே இறங்கும் படி அகண்ட மரம் அது. பிடித்த மேகங்களை தேவதைப் பாட்டிக்குப் பரிசாக குழந்தைகள் தருவார்கள். குழந்தைகளின் இந்த வெள்ளைப்பரிசில் தேவதைப் பாட்டிக்கும் அத்தனை ஆசை. சந்தோசமாக வாங்கிக் கொஞ்சம் முடிந்து கொள்வாள். மீதியை மந்திரப் பையில் போட்டு குழந்தைகளுக்கே தந்து விடுவாள்.

ஆனால் சில மாதங்களாகவே மேகவேட்டை அவ்வளவாக நடப்பதில்லை. ஏனென்று பாட்டிக்கு ஒரே சந்தேகம். அந்த சிறு குழந்தைகளைப் பிடித்து விசாரித்தாள், “செல்லங்களே! மேகங்கள் பிடிப்பது உங்களுக்குப் பிடித்த விளையாட்டாச்சே! ஏன் இப்போதெல்லாம் நீங்கள் மேகம் பறிப்பதில்லை?”

“பாட்டி! மேகங்கள் பறிக்க எகிறிக் குதித்தால் வானம் தலையில் இடிச்சிடுது! அதான் குதிக்கவே முடியலை!”

“அச்சோ! பார்த்து குதிங்க என் செல்லங்களா!” என்று பாட்டி அண்ணாந்து பார்க்க

“பார்த்துதான் பாட்டி குதிக்கிறோம்.. ஆனால் இந்த வானம் பார்த்தால் தெரிவதில்லையே! என்ன செய்வது?” என்றது ஒரு வாண்டு.

“ஆமாம் பாட்டி.. வானம் மட்டும் பார்க்கையில் தெரிந்தால் அதற்கேற்றபடி குதிக்கலாம்” என்று யோசனை சொன்னாள் ஒரு பெண்.

“சரியாச் சொன்ன பூவம்மா.. இப்போவே வானத்துக்கு வண்ணம் கொடுத்துடுறேன்” என்ற பாட்டி தன் மந்திரக்கோலை எடுத்து விட்டு யோசித்தார், “சரி சொல்லுங்க.. வானத்துக்கு என்ன வண்ணம் அடிக்கலாம்?”

“பச்சை”

“சிகப்பு”

“ஆரஞ்ச்”

“பிங்க்”

இப்படி நான்கு பக்கமிருந்தும் பத்து வண்ணங்களின் பெயர்கள் வர பாட்டிக்கு குழம்பி விட்டது. எல்லா வண்ணங்களுமே அழகுதான். இதில் எந்த வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது..

நாம் விழித்திருக்கும் வேளை முழுதும் பார்க்க வேண்டிய நிறமாக இருப்பதால் நீல நிறத்தில் வானம் இருக்கட்டும். அதுதான் நம் உள்ளத்தை சாந்தப்படுத்தும், சுற்றுப்புறத்தை எடுத்துக்காட்டும் தெளிவான‌ நிறம் என்று தேவதைப்பாட்டி முடிவு செய்தாள். பிள்ளைகளும் உற்சாகமாக சம்மதம் சொன்னார்கள்.

  வானமெங்கும் வண்ணமடிக்க அவ்வளவு நிறத்திற்கு எங்கே போவது?

சுற்றிலும் பார்த்த தேவைதைப்பாட்டிக்கு  பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த மலர்களைப் பார்த்து சட்டென்று யோசனை வந்தது. “இங்கே இத்தனை நீலநிறப் பூக்கள் இருக்கின்றனவே.. இவற்றின் நிறத்தைக் கொண்டு வானிற்கு வண்ணமடித்து விடலாம்!” என்று பாட்டி யோசனை சொல்ல பிள்ளைகள், “ஹே!!!!! ” என்று சந்தோசத்தில் குதித்தார்கள்.

தேவதைப்பாட்டியும் தன் மந்திரக்கோலால் பூக்களின் நிறங்களைக் கொண்டு வானிற்கு நீல வர்ணம் அடிக்க வானம் புது வண்ணத்தில் அழகாய் மனதை அள்ளியது. பிள்ளைகளும் வானம் தலையில் தட்டாமல் கவனமாகக் குதித்து தங்கள்‌ மேக வேட்டையில்‌ துள்ளிக் குதித்தார்கள். இப்படித்தான் வானத்திற்கு நீல நிறம் வந்தது.

“அப்படியா?” என்று தானே கேட்கிறீங்க? இல்லவே இல்லை. வானம்‌ ஏன் நீல நிறத்தில் இருக்கிறதென்று அறிவியல் காரணம் சொல்லவா?

உண்மையில் வானம் என்று ஒரு பொருள்‌ வானில் இல்லவே இல்லை😜😜 சூரியனிலிருந்து வரும் வெள்ளை ஒளி நம் காற்று மண்டலத்தின் வழி புகுந்து பூமியை அடைவதற்குள் காற்று மண்டலத்தில் உள்ள காற்றின் அணுக்களால் சிதறடிக்கப்படுகிறது.

appadiya

சிகப்பு போன்ற அலைநீளம் அதிகமுள்ள நிறங்கள் பூமியை வந்தடைய அலைநீளம் குறைவாக உள்ள நீல நிறம் காற்று மண்டலத்திலேயே சிதறடிக்கப்பட வானம் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.

ஓகே குட்டீஸ்.. ஒரு கலாட்டா கதையோடும் அதை ஒட்டிய அறிவியல் செய்தியோடும் அடுத்த மாதம் சந்திக்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments