புதிய மனிதன்!

தோட்டத்துக்குள் நுழைந்த காலின் முற்றிலும் ஒரு புதிய மனிதனாக மாறி விட்டான். அவனுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. அதன் பின் தினமும் மேரியுடனும் டிக்கனுடனும் அங்கு செல்ல ஆரம்பித்தான். டிக்கனின் செல்லப் பிராணிகள் இப்போது காலினுடனும் நட்பாகப் பழக ஆரம்பித்தன.

 நாட்கள் செல்லச் செல்ல அதிசயத்திலும் அதிசயமாகக் காலினின் உடல் நலம் தேறியது. இறந்து போவதைப் பற்றியோ நோயைப் பற்றியோ இப்போது அவன் பேசுவதே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கவும் ஆரம்பித்தான். அதன் பிறகு சில நாட்களில் ஓடவும் ஆரம்பித்து விட்டான்.

 “பெரியவன் ஆனவுடனே நான் ஒரு விஞ்ஞானி ஆவேன். ஓடுறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஓட்டப்பந்தய வீரனாவும் ஆவேன்” என்று ஆசையுடன் பேசினான். அந்த இரகசியத் தோட்டம் அவன் உடல்நலம் சரியாவதற்காக ஒரு மந்திரம் போட்டது போல் இருந்தது.

 மற்றவர்களைப் போலவே அவனும் நன்றாக சாப்பிட ஆரம்பித்தான். “உங்க அப்பாவுக்கு ஒரு லெட்டர் போட்டு நீ நல்லா இருக்கேன்னு சொல்லிடலாமா? சந்தோஷப் படுவாரே!” என்று மேரி கூற,

“இல்ல இப்ப வேண்டாம்! அப்பா ஊருக்குத் திரும்பி வரும்போது அவருக்கு ஒரு ஆச்சரியம் குடுக்கணும்னு நான் நினைக்கிறேன்” என்று கூறினான். வீட்டுப் பணியாளர்களிடமும் அவன் நன்றாக நடக்க முடிவதை, ஓட முடிவதைக் கூறவில்லை. டாக்டர் வந்தபோது கூட எப்போதும் போல் கட்டிலில் படுத்துக் கொண்டான்.

 ஒரு நாள் திரு.க்ரேவன் வெளியூரில் இருந்த போது உறக்கத்தில் அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அவரது மனைவி வந்தார். “நீ எங்க இருக்க?” என்று திரு.க்ரேவன் தன் மனைவியிடம் கனவில் கேட்க, “தோட்டத்தில் தான் இருக்கேன். உடனே வாங்க!” என்று அவர் கூறுவது போல கனவில் வந்தது.

 மறுநாள் திரு.க்ரேவனுக்கு அவர் வீட்டிலிருந்து உடனே கிளம்பி வருமாறு ஒரு கடிதம் வந்தது. ‘ஐயோ காலினுக்கு உடம்பு மோசமாயிடுச்சோ என்னவோ?’ என்று நினைத்தபடி வேகமாக வீட்டுக்கு விரைந்தார். வீட்டுக்கு போனவர் பணியாளர்களிடம், “காலின் எங்கே?” என்று கேட்க, அவன் தோட்டத்தில் இருப்பதாக அவர்கள் கூறினர்.

 தோட்டத்துக்கு விரைந்தார் திரு.க்ரேவன். ரகசியப் பூந்தோட்டத்தின் கதவை திறந்து உள்ளே நுழைந்தது தான் தாமதம், ஒரு சிறுவன் ஓடிவந்து அவர் மேல் மோதி விட்டான். அது யாரென்று பார்க்க அவருக்கு இன்பமான அதிர்ச்சி!

“காலின்! நீ எப்படி இப்படி நடக்க ஆரம்பிச்சே?” என்று அவர் ஆச்சரியத்துடன் கேட்க,

“இந்தத் தோட்டம்தான் என்னை மாத்திடுச்சு. என்னோட அம்மா இங்கே தான் இருக்கிறதா நான் உணருறேன்” என்றான் காலின்.

“ஆமாப்பா நான் கூட அம்மா இறந்தது இந்தத் தோட்டத்தினால் தான்னு தவறுதலா நினைச்சுகிட்டேன்.. அவங்களுடைய ஆன்மா இங்கதான் இருக்கு. இப்ப அதுவே உன்னைக் காப்பாத்தவும் செஞ்சிருக்கு” என்றவர் மகிழ்ச்சியுடன் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். இவ்வளவு நாளாக அவர் காலின் மேல் காட்டாமல் வைத்திருந்த பாசத்தை சேர்த்து வைத்து சிறுவர்கள் மூன்று பேரிடமும் காண்பித்தார். அனைவரும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர். பூந்தோட்டம் அமைதியாக சிரித்து அவர்களை வழியனுப்பி வைத்தது.

முற்றும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments