ஒரு சிறிய கிராமத்தில் ‌ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் இருந்த விளைநிலத்தில் விவசாயியால் தனது விவசாயத் தொழிலை

சரிவரச் செய்ய முடியவில்லை.

மழை பொய்த்து விட்டது. விதை நெல் வாங்குவதற்கும் கையில் பணவசதி இல்லை. ஊரில் இருந்த செல்வந்தர்களிடம் உதவி கேட்டும் யாரும் அவனுக்கு உதவி செய்யவில்லை. அவனும் அவனது குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள்.

வயதான பெற்றோர், கனிவும் அன்பும் கொண்ட மனைவி, சிறு குழந்தைகள் அனைவரும் பசியில் வாடினர். மனம் வருந்திய விவசாயி வேலை தேடி நகரத்திற்குக் கிளம்பினான்.

வீட்டில் இருந்த உணவை வழிப்பயணத்திற்காகக் கட்டிக் கொடுத்தாள் அவனுடைய மனைவி. வேக வைத்த கிழங்குகளும் சிறிது வெல்லம் கலந்த மாவும் மற்றும் மண்குடுவையில் நீரும் எடுத்துக் கொண்டு விவசாயி காட்டு வழியாக நடந்து சென்றான்.

நீண்ட தூரம் நடந்து சென்ற அவன் களைப்படைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தான். தான் கொண்டு வந்த ‌உணவு மூட்டையைப் பிரித்தான்.

அவனைச் சுற்றி எறும்புகள் சாரை சாரையாகச் சென்று கொண்டிருந்தன.

தான் கொண்டு வந்த உணவைச் சிறிது எறும்புகளுக்காகத் தரையில் போட்டான்.

அவனைச் சுற்றிக் குருவிகள் இரை தேடிப் பறந்து கொண்டிருந்தன. அந்தக் குருவிகளிடம் இரக்கம் கொண்டு கொஞ்சம் உணவைக் குருவிகளுக்கு இட்டான்.

ஒரு கவளத்தை எடுத்து வாயில் போடப்

போகும் சமயம் ஒரு நாயின் இரைப்பு சத்தம் காதில் விழ எழுந்து தேடிப் பார்த்தான்.

நாயொன்று அருகில் பசியாலும் தாகத்தாலும் தவித்துக் கொண்டிருந்தது. பசி மற்றும் தாகத்தால் வாடிய அந்த நாய் நடக்கவே சக்தியில்லாமல் கீழே விழுந்து கிடந்தது.

அந்த நாய்க்கும் சிறிது உணவளித்து அதற்குத் தான் கொண்டு வந்திருந்த குடிநீரையுடன் புகட்டினான் இரக்க குணமும் கருணை உள்ளமும் கொண்ட அந்த விவசாயி.

நாய் சிறிது பலம் பெற்று எழுந்து நின்று

நன்றியுடன் வாலை ஆட்டியது. அதன் உடலைப் பாசத்துடன் வருடிய விவசாயி மிஞ்சியிருந்த உணவை அரை வயிறு உண்டு விட்டு அவனிடம் மிச்சமிருந்த ‌சிறிதளவு நீரையும் அருந்தி விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.

விரைவிலேயே நகரையும் அடைந்தான். ஏதாவது வேலை கிடைக்குமா என்று அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.

kangal

அரண்மனைப் பொற்கொல்லன் ஒருத்தன் விவசாயியைப் பார்த்துத் தனக்கு உதவிக்கு ஆள் வேண்டும் என்று தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

அப்பாவியான அவனது தோற்றத்தால் தான் செய்து வந்த சில குற்றங்களைப் போட்டு சிறையிலடைக்கப் பலிகடா தேடிக் கொண்டிருந்த அவனது கண்களில் விவசாயி படத் தன்னுடன் அரண்மனைக்கு விவசாயியை அழைத்துச் சென்றான்.

அந்தப் பொற்கொல்லன் ஒரு மகா திருடன். அரசிக்கு நகைகள் செய்வதற்காக அரசர் கொடுத்த தங்கத்தைப் பெருமளவு திருடித்

தன்னிடம் வைத்துக் கொண்டு பித்தளை கலந்து நகைகளைச் செய்து வந்தான்.

நேர்மையான விவசாயிக்குப் பொற்கொல்லனின் திருட்டுத்தனம் புரிந்து விட அவனுக்கு உதவி செய்ய மறுக்கிறான்.

உடனே அவன் தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவானோ என்று அச்சப்பட்டு விவசாயிக்கு எதிராக வஞ்சனையுடன் ஒரு சதிவலை பின்னுகிறான் அந்தப் பொற்கொல்லன்.

விவசாயியின் பொருட்களோடு அரசியின்  நகையைத் தந்திரமாக ஒளித்து வைத்து விட்டு அந்த நகையைக் காணவில்லை என்று காவலரை அழைத்துச் சொல்ல, அவர்கள் சுற்றும்முற்றும் சோதனையிட்ட சமயம் விவசாயி வைத்திருந்த பொருட்களில் நகை கிடைத்து விடுகிறது.

விவசாயி தான் திருடினானென்று குற்றச்சாட்டு அவன்மீது போடப் பட்டது. அரசவைக்கு அழைத்துச் செல்லப் பட்டான். அரசன் விவசாயியை விசாரணை செய்த சமயம் அந்த விவசாயிக்குப் பேச வாய்ப்பு அளிக்கப் படவேயில்லை.

பொற்கொல்லன் நீண்ட நாட்களாக ‌அரண்மனை வந்து போவதால் அவனது சாட்சியத்தை உண்மையென்று நம்பி விவசாயிக்கு அரசன் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தான். பாவம் அந்த விவசாயி! ஏழை சொல் அம்பலம் ஏறவில்லை.

அந்த நகரத்தில் திருட்டுக்கு மட்டும் எப்போதும் மரணதண்டனை தான். அதுவும் ஒரு பொது மைதானத்தில் அரசர் மற்றும் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்களையும் சூழ்ந்து நிற்க வைத்து அனைவரும் காணும் படியாகக் கூரிய வாளால் தலையை வெட்டி விடுவார்கள்.

பார்வையாளர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று எண்ணினார்கள்.

அடுத்த நாள் காலையில் விவசாயி தண்டனை வழங்கப்படும் இடத்திற்கு இழுத்துச் செல்லப் பட்டான்.

முதல் முறை தண்டனை வழங்குபவன் வாளைத் தீட்டி வாளை ஓங்கிய சமயம் எங்கிருந்தோ வந்த ஒரு கட்டெறும்பு அவன் காலைச் சுரீரென்று கடிக்க வாள் குறி தப்பிக் கீழே விழுந்தது.

இரண்டாவது முறை அவன் வாளை ஓங்கிய சமயம் எங்கிருந்தோ பறந்து வந்த குருவியொன்று அவன் கண்ணைக் குறி பார்த்துக் கொத்த

வாளைக் கீழே போட்டு விட்டுக் குருதி வடியும் கண்ணைக் கைகளால் மூடினான்.

இரண்டு முறை விவசாயி தப்பியதில் அரசனுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது.

மூன்றாவது முறையாக வேறு ஒருவனை அழைத்து தண்டனையை நிறைவேற்றச் சொல்ல அவனும் வந்து வாளை ஓங்கினான். அப்போது ஒரு நாய் வந்து அவனைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே அவன் மேல் பாய்ந்து வாளைத் தட்டி விட்டது.

மூன்றாவது முறையும் விவசாயி தப்பிவிட, அரசனுக்குப் பெரிய சந்தேகம் மனதில் எழுந்தது. விவசாயியின் கைகளில் கட்டிய கயிற்றை அவிழ்த்து விடச் சொல்லிக் கட்டளையிட்டான்.

கைக்கட்டுகள் அவிழ்க்கப் பட்டு விடுதலையான விவசாயி பெரிய குரலில் சிரிக்கத் தொடங்கினான்.

அரசனுக்குப் பெரும் சினம் எழுந்தது மனதில்.

“எதற்காகச் சிரிக்கிறாய்? என்னை அவமதிக்க எண்ணுகிறாயா? உனது தண்டனை இன்னும் ரத்து செய்யப்படவில்லை.அதற்குள் எதற்காக ஆனந்தம்?” என்று அரசன் கேட்டான்.

“இல்லை அரசே! உங்கள் நிலையை எண்ணி சிரித்தேன்” என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்தான். சினம் தலைக்கேறிய அரசன் விவசாயியைப் பார்த்துக் கத்தினான்.

“மூடனே! காரணத்தைச் சொல்லி விட்டு சிரி. இல்லையென்றால் உனது தலையை நானே கொய்து விடுவேன்”

என்று சொல்லிக் கொண்டே வாளை உருவினான்.

“நான் ஓர் ஏழை விவசாயி. நகரத்திற்கு வேலை தேடிக் காட்டு வழியாக வந்த நான் வழியில் உண்ணக் கொண்டு வந்த கட்டுச் சோற்றையும் நீரையும் சிறிதளவு எறும்புக் கூட்டத்திற்கும் பறவைகளுக்கும் பசியாலும் தாகத்தாலும் துடித்துக் கொண்டிருந்த இந்த நாய்க்கும் அளித்தேன். நன்றி மறக்காத இந்த ஜீவன்கள் எனது உயிரைக் காப்பாற்றின. ஆனால் விவசாயம் என்ற உயர்தொழில் செய்து நாட்டிற்கே உணவளிக்கும் என் போன்ற ஏழை விவசாயிகளிடம் நாட்டு மக்கள் யாருமே நன்றியோ கருணையோ காட்டவில்லை. உதவி செய்த எனக்கு மறு உதவி செய்தன இந்த உயிர்கள்.

ஆனால் சரியாக விசாரிக்காமல் தவறான தண்டனை வழங்கும் உங்களைப் போன்ற அரசர்களுக்கு நாளை யார் உதவி செய்வார்கள் என்று எண்ணிச் சிரித்தேன்” என்று கூற‌, அரசனும் கூடியிருந்த பொது மக்களும் விவசாயியின் கூற்றில் இருந்த மகத்தான உண்மையைப் புரிந்து கொண்டு வெட்கித் தலை குனிந்தனர்.

அரசன் உடனே பொற்கொல்லனை அழைத்து விசாரிக்க அவன் உண்மையை ஒத்துக் கொண்டான்.

பலநாள் திருடன் அன்று அகப்பட்டான்.

தனது கண்களைத் திறந்து வைத்த விவசாயிக்குப் பொற்காசுகள் பரிசாக அளித்து அரண்மனையிலேயே வேலையும் தர முன் வந்தான் அரசன். அந்த விவசாயி உடனே மறுத்து விட்டான். .

“எனது தொழில் விவசாயம். அதில் கிடைக்கும் மனநிறைவு எனக்கு மற்ற வேலைகளில் கிடைப்பதில்லை. எனக்கு உதவி செய்ய நினைத்தால் கொஞ்சம் விதை நெல் மட்டும் அளியுங்கள். நான் எனது விவசாயத்தைத் தொடர்கிறேன்”

என்று கூறிவிட, விதைநெல்லை அவனுக்கு அளித்து அவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் பல பரிசுகள் அளித்து அரச மரியாதையுடன் அவனை அனுப்பி வைத்தான் அரசன்.

அதற்குப் பின்னர் அரசனும் சிறந்த முறையில் ஆட்சி செய்ய மக்களும் மகிழ்வுடன் வாழ்ந்தனர். விவசாயியும் தனது நிலத்தில் விவசாயத்தை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தான்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments