achaankal

லக்க்ஷனா கிச்சுகிச்சு தாம்பாளம் விளையாடிக் கொண்டிருக்கும் போது, “இது மாதிரி வேறு ஒரு ஈசியான விளையாட்டு சொல்லிக் கொடு ஸ்ருதி.

 நீ இங்க இருக்கும் போதே நாங்க நிறைய விளையாட்டை கத்துக்கறோம். அப்ப தான் நீ லீவு முடுஞ்சு ஊருக்கு போனால் கூட, நாங்க இதை எல்லாம் விளையாடுவோம்.

 அதுவும் இப்ப படிக்கற நம்மளை மாதிரி பசங்களுக்கு கண்ல பிரச்சனை வந்து, இந்த வயசுலயே கண்ணாடி போடற மாதிரி இருக்கு .

கண்ணுக்குப் பயிற்சி கொடுக்கற மாதிரி ஒரு விளையாட்டு இருந்தால் சொல்லு” என்றாள் லக்க்ஷணா

“ஓ இருக்கே” என்று உற்சாகமான ஸ்ருதி, “அக்கா அச்சாங்கல் விளையாண்டால் கண்ணுக்கு நல்ல பயிற்சி. கண்மேலேயும் கிழேயும் போய் போய் வரும். நான் அதைச் சொல்லித் தரவா?” என்றாள்.

“அப்ப சரி அதையே சொல்லித் தா. நாங்க அதை விளையாண்டு எங்க கண்ண பலமா ஆக்கணும்” என்றாள் லக்க்ஷணா.

 ஸ்ருதி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள். “அக்கா இருங்க வரேன்” என்று போய் ஏழு சிறு கற்களை எடுத்து வந்தாள்

“இந்த விளையாட்டை ஏழு கல் விளையாட்டுன்னு சொல்வாங்க. அச்சாங்கல் விளையாட்டை ஐந்து கற்கள், ஏழு கற்கள், பத்து கற்கள் கொண்டும் விளையாடலாம்.

இந்த விளையாட்டை இருவர் முதல் எத்தனை பேர் வேண்டுமானாலும் வயது வரம்பு இல்லாமல் வீட்டில் இருந்தபடியே விளையாடலாம். அக்கா இதன் விதிமுறை சொல்றேன் கேளுங்க” என்றாள்.

achaankal1

விளையாடும் முறை :

முதல் சுற்று :

கையில் உள்ள ஏழு கற்களை பரவலாகக் கீழே உருட்டிவிட்டு, அதில் ஏதேனும் ஒரு கல்லை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதை மேலே தூக்கிபோட்டு, கீழே வருவதற்குள் கீழ் உள்ள ஏதேனும் ஒரு கல்லை எடுத்துக் கொண்டு மேலிருந்து கீழ்வரும் கல்லையும் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும்.

இப்படி கீழே இருந்து கல் எடுக்கும் போது கீழே உள்ள வேறு கல்லில் நம் கை பட்டு விடக்கூடாது. எடுக்க வேண்டிய ஒரு கல்லை மட்டும் தான் எடுக்க வேண்டும்

 இதே போன்று முதல் சுற்றில் ஒவ்வொரு கற்களாக எடுக்க வேண்டும் அக்கா.

இரண்டாம் சுற்று :

இரண்டாம் சுற்றில், இரண்டு இரண்டு கற்களாக வாரி எடுக்க வேண்டும்.

மூன்றாம் சுற்று:

மூன்றாம் சுற்றில் மூன்று மூன்று கற்களாகச் சேர்த்து வாரி எடுக்க வேண்டும்.

நான்காம் சுற்று :

இதில், கையில் எடுத்தக் கல்லை தவிர்த்து மீதமுள்ள ஆறு கற்களில் நான்கு கற்களாக ஒரு முறையும், இரண்டு கற்களாக ஒரு முறையும் சேர்த்து வாரி எடுக்க வேண்டும்.

achaankal2

ஐந்தாம் சுற்று :

இதில், கையில் எடுத்த கல்லை தவிர்த்து மீதமுள்ள ஆறு கற்களில் ஐந்து கற்களை ஒரு முறையும், ஒரு கல் தனியாகவும் வாரி எடுக்க வேண்டும்.

ஆறாம் சுற்று :

இதில், கையில் எடுத்த கல்லை தவிர்த்து மீதமுள்ள ஆறு கற்களையும் சேர்த்து வாரி எடுக்க வேண்டும்.

ஏழாம் சுற்று :

ஏழாம் சுற்றில் ஒரு கல்லை முதலிலும், இரண்டு கல்லை இரண்டாவதும், மூன்று கல்லை மூன்றாவதுமாக வாரி எடுக்க வேண்டும்.

எட்டாம் சுற்று :

ஏழு கல்லையும் கீழே போட்டு அதில் ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு கீழே வருவதற்குள் கீழ் உள்ள ஒரு கல்லை எடுத்துக் கொண்டு மேலிருந்து கீழ்வரும் கல்லையும் கையில் சேர்த்து பிடிக்க வேண்டும்.

மறுபடியும் ஒரு கல்லை மேலே போட்டு கையில் இருக்கும் கல்லை கீழே உள்ள ஒரு கல்லுடன் வைத்து, அந்த இரு கற்களையும் சேர்த்து வாரி எடுக்கவும். அதே மாதிரி ஆறு கற்களுடன் சேர்த்து அதை வாரி எடுக்கும் வரை விளையாட வேண்டும்.

ஒன்பதாம் சுற்று :

ஒன்பதாவது  சுற்றில் ஏழு கற்களையும் கீழே போட்டு ஒரு கல்லை எடுத்து மற்றொரு கல்லை வாரிக் கொண்டு அந்தக்கல்லை கையிலே வைத்துக் கொண்டு அடுத்தக்கல்லை வாரி எடுக்கும் போது கையில் உள்ள கல்லை கீழே விட்டுவிட வேண்டும்.

இவ்வாறு கீழே உள்ள கற்களை மாற்றிவிட்டு மூன்று தடவைக்குள் அனைத்து கற்களையும் ஒன்று சேர்த்து வாரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பத்தாம் சுற்று :

பத்தாவது  சுற்றில் இரண்டு கைகளிலும் ஏழு கற்களை எடுத்து அதை அனைத்தையும் கீழே விழாமல் கையையும் பிரிக்காமல் தன் கெண்டக்கைக்கு கொண்டு வந்து அதை தூக்கிப்போட்டு பிடித்துக்கொள்ளவும்.

இறுதியாக ஏழு கற்களையும் உள்ளங்கையில் வைத்து அதை தூக்கிப்போட்டு பின் கையால் பிடித்து மறுபடியும் அதை சொக்கி பிடிக்க வேண்டும், என்று சொல்லி முடித்த ஸ்ருதி, “இதை எல்லாம் நான் விளையாண்டு காண்பிக்கறேன் பாருங்க” என்று விளையாடிக் காட்டினாள்.

ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அவள் விளையாடி முடித்ததும் அதே கல்லை வாங்கி மேலே தூக்கிப் போட்டு கீழ் இருந்து கல்லை எடுப்பதற்குள், மேல உள்ள கல் கீழே விழுந்து விட சிரித்தார்கள் எல்லாரும்.

 மறுபடியும் முயற்சி பண்ணி லக்க்ஷணா இப்பொழுது கல்லை பிடித்து விட்டு சந்தோஷப் பட்டாள். அவளிடமிருந்து கல்லை வாங்கியவர்கள் ஒவ்வொருவராக விளையாட ஆரம்பித்தார்கள்.

குட்டீஸ்! நீங்களும் இதை விளையாண்டு விட்டு உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க தங்கங்களா!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments