வணக்கம் குழந்தைகளே!!

இன்று ஒரு விஷயத்தை அறிந்து கொள்வோமா?

நாம் பல இடங்களில் சட்டம், நீதி என்று பேசுவதைப் பார்த்திருப்போம்.

சட்டம் என்றால் என்ன?

நம் வீடுகளில் பழைய புகைப்படங்கள், ஃப்ரேம் செய்து மாட்டியிருப்பதைப் பார்த்திருப்போம். வாழ்த்துகள் கூட ஃப்ரேம் செய்யப்பட்டிருக்கும். அது அந்தப் புகைப்படத்துக்கு அழகாய் இருக்கும். அத்துடன் ஒரு வடிவத்தைத் தரும். பாதுகாப்பாய் இருக்கும். இந்த ஃப்ரேம் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் சட்டம் என்று பொருள் உண்டு. மிக எளிமையான உதாரணம் இது. சட்டம் என்பது நம் வாழ்க்கைக்கு ஒரு வடிவத்தை தரும். பாதுகாப்பாய் இருக்கும்.

ஆதிகாலத்தில் மனிதன் சட்டம் என்று எதுவும் அறிந்திருக்கவில்லை. இஷ்டப்படி வேட்டையாடி வாழ்ந்துவந்தான். குழுவாகச் சேர்ந்து வாழும்போது ஒரு வழிமுறை தேவைப்பட்டது. அதற்காக இத்தனைபேர் வேட்டையாடப் போக வேண்டும், சிலர் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்று வழிமுறை வகுத்தார்கள். இதன்படி ஆரம்பத்தில் தோன்றியது தான் சட்டம் என்னும் முறை. இதை மீறினால் சட்டத்தை மீறியதாகப் பொருள்.

law

நமது பள்ளிகளில் இத்தனை மணிக்குள் வரவேண்டும், யூனிஃபார்ம் போடவேண்டும் என்பது பள்ளிகளின் சட்டம் என கொள்ளலாம். இந்த சட்டம் இல்லையென்றால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்களேன்.

நவீன காலத்தில் வாழ்க்கைமுறை மிக முன்னேற்றமடைந்ததால் இந்த சட்டமுறைகளின் தேவை அதிகம். ஒவ்வொரு நாட்டுக்கும் சட்டம் என்பது தனித்தன்மையானது.

நம் நாடு சுதந்திரமடைவதற்கு முன் ஆங்கிலேயர்களின் சட்டவிதிகளின்படி இருந்தது. சுதந்திர இந்தியாவின் சட்டங்களை வடிவமத்து எழுதிகொடுத்தவர் அண்ணல் அம்பேத்கார்.

பல ஆயிரம் விதிகளை கொண்டது நமது சட்டநூல். இதை நாம் எல்லாரும் அறிந்துகொள்ளமுடியுமா? கடினம்தான். அதற்கு உதவுபவர்கள் வக்கீல்கள் எனப்படும் வழக்கறிஞர்கள்.

மக்கள் சட்டப்படி நடக்கிறார்களா எனக் கண்காணித்து பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு காவல்துறை.

ஒரு ட்ராபிக் சிக்னலில் சிவப்புவிளக்கு எரிந்தால் நின்றுவிட வேண்டும் என்பது சட்டம். அதை மீறி ஒருவர் சென்றால் சட்டத்தை மீறியதாக அர்த்தம். ட்ராபிக் போலீஸ் அவர்களைப் பிடித்து சட்டப்படி கேஸ் எழுதுவார். அவர் உடனடியாக தண்டனை தரமுடியுமா? சில விதிகளின்படி அவர் சிறு அபராதம் செலுத்தி தண்டனை தரலாம். அல்லது கேஸ் எழுதி நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாம்.

இதுபோல ஒருவீட்டில் பாதுகாப்பாய் இருக்கும் பொருளை, பணத்தை மற்றவர் திருடிவிட்டால், அதைக் கண்டறியும் பொறுப்பு காவல்துறையைச் சார்ந்த்து. அவர்கள் கண்டுபிடித்து வழக்குப் போட்டு நீதிமன்றத்தில் தருவார்கள்.

சட்டங்களை பராமரிக்க நீதித்துறை செயல்படுகின்றது. காவல்துறை அரசாங்கத்தை சேர்ந்த்து. ஆனாலும் அவர்கள் நேரிடையாக நீதிமன்றத்தில் வாதாட மாட்டார்கள். அதற்கு அரசுத் தரப்பில் வக்கீல்கள் இருப்பார்கள். அவர்களே இதுபோல இவர் திருடிவிட்டார், சட்டப்படி இந்த தண்டனை தரவேண்டும் என்று வாதாடுவார்கள். இது பொய்யாய் இருந்து தவறாக தண்டனை கொடுத்துவிடக்கூடாது அல்லவா. அதனால் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வக்கீல் வைத்து வாதாடலாம்.

Courtroom
Representational Image

இரு தரப்பு வக்கீல்களும் வாதாடுவார்கள். இதில் ஆதாரங்கள் மூலம் உண்மையை அறிந்து தண்டனை தரும் அதிகாரம் கொண்டவர் நீதிபதி. அவர் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டவிதிகளை அறிந்து தண்டனையோ, விடுதலையோ தருவார்.

நாம் தீபாவளி , பொங்கல் விசேஷ தினங்களில் டிவியில் பட்டிமன்றம் பார்ப்போமே, அதுபோலத்தான் வழக்கு நடக்கும். ஆனால் கொஞ்சம் சீரியஸாக நடக்கும். சினிமாக்களில் நீதிமன்ற காட்சிகள் கொஞ்சம் மிகைப்படுத்தி இருக்கும்.

அன்புக் குழந்தைகளே! ஓரளவு சட்டம், நீதி என்றால் என்னவென்று தெரிந்துகொண்டீர்களா… நாம் நல்ல குடிமக்களாக இருந்து சட்டங்களை மதிக்கக் கற்றுக்கொள்வோம்.

இந்த கட்டுரையில் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் போடுங்கள்.

நன்றி.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments