பல கோடி வருடங்களுக்கு முன்பு, நம் பூமியில் செடிகள், கொடிகள், மரங்கள் இவற்றின் தண்டுகள், இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் தவிர மற்ற   அனைத்தும் அதாவது நீந்தும், ஊர்ந்து செல்லும், பறக்கும், நடக்கும், துள்ளிச்செல்லும் விலங்குகள் அனைத்தும் கறுப்பு வெள்ளை நிறத்தில்தான் இருந்தன!!  நம் கண்களில் வெள்ளைப் பின்புலத்தில் கருவிழிகள் உள்ளதல்லவா,  அதுபோலத்தான் எல்லா உயிரினங்களும் இருக்கும்.  (என்னது!! ஏற்கனவே  கற்பனை உலகத்திற்கு வந்து விட்டீர்களா? சமத்துக் குட்டிஸ்!!!)

நிறங்கள் இல்லாத தங்கள் உலகம்  எல்லா உயிர்களுக்கும் போரடித்துவிட்டது. நீல நிற வானம், சிகப்பும் மஞ்சளுமாய் வர்ணஜாலம் காட்டும் சூரியன், பச்சை இலைகள், வண்ண வண்ணப் பூக்கள் இவற்றைப்  பார்த்து எல்லா உயிர்களுக்கும் ஒரே ஆசை; தாங்களும் அவற்றைப் போல வண்ணமயமாய் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற ஆசை அவர்களின் ஆசை ஏக்கமாக மாறியது.  கடவுளிடம் வேண்டிக்கொள்ளவும் ஆரம்பித்தன.

ஒரு நாள் மாலை,  ‘டம் டம்’ என்று மேகங்கள் முட்டி மோதி டமாரம் அடித்தன. எல்லா உயிரினங்களும்  வானை அண்ணாந்து பார்க்க, பெரிய கருமேகம், “உங்கள் அனைவரின் வேண்டுதலும் வண்ணங்களின் ராஜா வானவில்லின் காதுகளுக்கு எட்டியது. இன்னும் சிறிது நேரத்தில் அவர் பூமிக்கு இறங்கி வருகிறார். அவர் மனம் குளிரும்படி அவருக்குப் பரிசு கொடுங்கள்! உங்களுக்கு ஏற்ற வண்ணத்தை அவர் பரிசாகத் தருவார்”, என்று முழங்கியது.

 அதைக் கேட்டு அனைத்து உயிரினங்களும் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தன. வானவில் ராஜாவிற்கு பரிசுகள் சேகரிக்க அங்கும் இங்கும் ஓடின.

நம் கதையின் ஹீரோ தேனீ இதையெல்லாம்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இன்றைய  தேனீக்களின் சிறப்பே அதன் சுறுசுறுப்பு தானே! ஆனால் அப்போதெல்லாம் தேனீக்கள் பயங்கர சோம்பேறியாக இருந்தன! எல்லோரும் அங்கும் இங்கும் பரிசுக்காகப் பறந்து கொண்டிருந்தபோது நம் தேனீ மட்டும், “எதற்கும் உதவாத இந்த கலருக்காக நான் ஏன்  கஷ்டப்படனும்?” என்று எண்ணியபடி உல்லாசமாகப் படுத்திருந்தது,”

  சில மணி நேரங்களில் வானவில் ராஜா வானத்திலிருந்து கம்பீரமாக இறங்கி பூமிக்கு வந்தார்.  எல்லா உயிர்களும் பயபக்தியோடும் பரவசத்தோடும் அவர் முன்னால் நின்றன.

முதலில் சிங்கராஜா தான் மான்களையும், மாடுகளையும் வேட்டையாடும்போது மறைந்து நிற்க உதவும் புற்களைப் பரிசாக வானவில் ராஜா முன் வைத்தது. சிறு புன்னகையோடு அதைப் பார்த்த வானவில் ராஜா, “நீ இந்த புல்லின் நிறத்திற்கே மாறிவிடு.. வேட்டையாடுவதற்கு அந்த நிறம் உதவியாக இருக்கும்” என்று வரமளித்தார்.

சிங்கம் மகிழ்ச்சியோடு செல்ல, யானை தன் பலத்தைக் காட்ட பெரிய கருஞ்சாம்பல் நிறப் பாறையைத் தூக்கி வந்து நிறுத்தியது. வியந்த வானவில் ராஜா, “நீ இந்த கருஞ்சாம்பல் நிறத்திற்கே மாறிவிடு!”  என்றார்.

அடுத்து வந்த வரிக்குதிரை, “வந்து.. எனக்கு.. எனக்கு இந்த கருப்பு வெள்ளை நிறம்தான் வேண்டும்.  அதற்கு என்ன பரிசு தருவது வானவில் ராஜா?”என்று தலையைச் சொறிய, “ஹாஹா!! என்று சிரித்த வானவில் ராஜா, ” சரி.. சரி..நீ இப்படியே இருந்து கொள்!” என்றார்.

 சிறகடித்து வந்த வண்ணத்துப்பூச்சி, பல நிறப் பூக்களில் இருக்கும் சுவையான சாறு எடுத்து  ஒரு சொட்டாக இலையில் வைத்து வானவில் ராஜாவிற்குப் பரிசளித்தது. அதைச் சுவைத்த வானவில் ராஜா, “ஆஹா! என்ன சுவை!” என்று பாராட்டினார். மிகவும் சந்தோசமடைந்த வானவில் ராஜா, “ரொம்பவும் சுவையான பரிசு! இந்தப்  பூக்கள் அனைத்தின் நிறமும் உனக்குக் கிடைக்கட்டும்!” என்றார்.

 இப்படி ஒவ்வொரு விலங்காக வர நம் தேனீயின் முறையும் வந்தது. எதுவும் எடுத்து வரவில்லை.. என்ன செய்வது? அருகே உள்ள மண் துகள் ஒன்றைத் தன்  குட்டிக் கால்களால் தூக்கி வானவில் ராஜாவிடம்  நீட்டியது நம் சோம்பேறித் தேனீ. ஒற்றைக் கண் புருவத்தை உயர்த்தி ஆச்சரியமாய் பார்த்த வானவில் ராஜா, தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு, “இந்த மண் துகளின் நிறம் உனக்குக் கிடைக்கட்டும்!” என்றார்.

 இத்தனை நேரம் வரிசையில் நின்றதிலேயே போரடித்துப்போன தேனீ, அங்கிருந்து கிளம்பிக் தூங்கப் போய்விட்டது.

 அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தால், தேனீக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. தோட்டம் எங்கும் அழகான பூக்கள் இறக்கை வந்து பறப்பது போல அற்புத அழகு! இது என்ன அதிசயம் என்று  உற்றுப் பார்த்தால் அவையெல்லாம் நம் வண்ணத்துப்பூச்சிகள்! மஞ்சள், இளம் பச்சை, ஊதா, நீலம், இளஞ்சிவப்பு என எல்லா நிறங்களிலும் அழகான டிசைன்களில் சிறகுகளை அடித்து தோட்டம் எங்கும் உல்லாசமாய் பறந்து கொண்டிருந்தன வண்ணத்துப்பூச்சிகள். இதை பார்த்ததும் தேனீக்கு பயங்கர ஏமாற்றம்.  தோட்டத்திலிருந்து வெளியே வந்தால் எல்லா விலங்குகளும் தங்கள் புது நிறத்தில் உற்சாகமாக ஆடி ஓடிக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள். அது போக,  நிறங்கள் அனைத்தும் அந்தந்த உயிரினங்களுக்கு வேட்டையாடவும், வேட்டையிலிருந்து தப்பிக்கவும் கைகொடுப்பதையும் பார்த்தது.

Theniyin Parisu
படம்: அப்புசிவா

 ‘இத்தனை அழகாய் மாறி இருக்க முடியுமா? அதுவும் இல்லாமல், நான் பூக்கள் நிறத்திலிருந்தால் பெரிய பல்லி, ஓணான்களுக்கும் இரையாகாமல் தப்பிக்கலாம். ஆஹா! எத்தனை பெரிய வாய்ப்பை வீணாக்கி விட்டேன்!’ என்று வருந்தியது நம் சோம்பேறித் தேனீ. சோகமாய் தன் வருத்தத்தை வானத்திடம் சொல்ல, ஒரு மேகம், “இதற்குத்தான் எப்போதும் சோம்பேறியாகவும் அலட்சியமாகவும் இருக்கக்கூடாது! கிடைக்கின்ற வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!” என்றது. மற்றொரு மேகமோ, “சரி சரி!  வருத்தப்படாதே! நடந்தது நடந்துவிட்டது.. இன்னொரு முறை இது போல் இருக்காதே! இன்னும் சில கோடி வருடங்களுக்குப் பிறகு வானவில் ராஜா மீண்டும் பூமிக்கு வருவார். ஒரு அற்புதமான பொருளை வானவில் ராஜாவிற்குப் பரிசாகக் கொடுத்து, உனக்கு வேண்டிய வண்ணத்தைப் பெற்றுக் கொள்..” என்றது.

 இதைக் கேட்டதும், “அப்படியா!!” எனத் துள்ளி எழுந்த தேனீ புயலாய் மாறியது. இப்போது இருக்கும் சுறுசுறுப்பு தேனீயாக மாறிவிட்டது. ஒரு நாளுக்கு ஆயிரத்திற்கும் மேலான பூக்களின் இனிமையான சாறை உறிஞ்சி, அதை சுவை மிக்கதாக மாற்றி பெட்டி பெட்டியாய் கட்டுகிறது. பிற விலங்குகளிடம் இருந்து அந்தப் பெட்டிகளைக் காக்க மரங்களின் உச்சியில் அந்தத் தேன் பெட்டிகளைத் தொங்கவும் விடுகிறது .

 புரிந்ததா குட்டிஸ்? வானவில் ராஜாவுக்காக தேனீக்கள்  சேர்த்து வைத்திருக்கும் சுவையான பரிசு தான் நீங்கள் சப்புக்கொட்டி சாப்பிடும் தேன்..

 கதை நன்றாக இருந்ததா? சரி.. தேன் பற்றிய அறிவியல் உண்மைகளைக் தெரிந்து கொள்ளலாமா? தேனீக்கள் பற்றிய அறிவியல் உண்மை நம் கற்பனை கதையைப் போலவே ரொம்பவும் சுவாரசியமானது. ஒரு ராணித் தேனீ, சில ஆண் தேனீக்கள், பல தேன் சேகரிக்கும் தேனீக்கள் என்று மூன்று வகைத் தேனீக்கள் ஒரு தேன் கூட்டில் சமூகமாக வசிக்கும்.  ஒரு நாளில் ஒரு தேனீ நிஜமாகவே ஆயிரம் பூக்களிலிருந்து சாறை உறிஞ்சும். அதைத் தன் உமிழ் நீரில் கலந்து பல வேதிவினைக்கு உள்ளாக்கித் தேனாக மாற்றும். ‘அச்சோ! உமிழ்நீரில் கலந்தா?’ என்கிறீர்களா?  இந்த வேதிவினை முடிவில் உருவாகும் உண்மையான தேன் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாது. இந்தத் தேன் வறண்ட காலங்களில் தேனீக்களுக்கு உணவாகவும், முட்டையிலிருந்து வெளிவந்து பிற்காலத்தில் தேனீக்களாக மாறப் போகிற  புழுக்களுக்கு உணவாகவும் பயன்படுகிறது. 

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments