ஒரு காட்டுக்குள் எறும்புக்கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதில் ஒரு குட்டி எறும்பு ஒரு மரத்தடியில் மிகவும் சோகமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியில் ஒரு முனிவர் எறும்பு வந்தது. அது அந்தக் குட்டி எறும்பை பார்த்து, அது மிகவும் சோகமாக இருப்பதை அறிந்து கொண்டது.

Erumbin Gnanam
படம் : அப்புசிவா

“ஏன் குட்டி, மிகவும் சோகமாக இருக்கிறாய்?” என்று கேட்டது முனிவர் எறும்பு. அதற்கு அந்த குட்டி எறும்பு,

“ஒன்றுமில்லை பெரியவரே” என்றது.

“உன் அம்மா எங்கே?” என்று மறுபடி கேள்வி கேட்டது முனிவர் எறும்பு.

“அவர்கள் இரை தேடும் வேலையில் இருக்கிறார்கள்.” என்று சொல்லிவிட்டு அமைதியாக தலைகுனிந்து கொண்டது குட்டி எறும்பு. அந்த முனிவர் குட்டியின் அருகில் அமர்ந்து ஆறுதலாக தலையை தடவிகொடுக்க, அந்த குட்டிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

“நீங்கள் முனிவர் தானே, எனக்கு ஒரு சந்தேகம். அதை தீர்த்து வைப்பீர்களா?” என்று கேட்டது குட்டி. முனிவர் தலையாட்டினார்.

“நான் சில மிருகங்களை பார்த்தேன். அதெல்லாம் நல்ல உயரமாக பலசாலியாக இருக்கிறது. அதனால் அவை மிகவும் தைரியமாக காட்டுக்குள் சுற்றுகின்றன. அவையெல்லாம் சிங்கம், புலி, மான் என்று அம்மா சொல்லுவார்கள். சில சமயம் மனிதர்கள் கூட வருவார்கள். ஆனால் நாங்கள் மிகச் சிறியதாக இருக்கிறோம் அதனால் மிகவும் சிரமப்படுகிறோம். உணவு தேட போகும்போதெல்லாம் யாராவது மிதித்து விடுவார்களோ என பயத்துடன் போய் வருவதாக பெரியவர்கள் பேசிக் கொள்கிறார்கள். எங்களுக்கு ஏன் இந்த கஷ்டம்? நாங்களும் பெரிதாக இருந்தால் சிரமமின்றி வாழலாமே. அதுதான் நினைத்தேன். அழுகை வந்து விடுகிறது.” என்றது குட்டி எறும்பு.

முனிவர் எறும்புக்கு அந்தக் குட்டியின் கேள்வி ஆச்சரியமாகவும், சிரிப்பாகவும் இருந்தது. அது குட்டி எறும்பை பார்த்து,

“அழகுக் குட்டியே, நீ என் கையை பிடித்துக்கொள், அப்படியே கண்ணை மூடேன்” என்றது. குட்டியும் அதுபோலவே கண்ணை மூடிக்கொண்டு அந்த முனிவர் எறும்பின் கையை பிடித்துக்கொண்டது. சிறிது நேரத்தில் எங்கேயோ பறப்பது போன்று தோன்றியது.

“குட்டி, நீ இப்போது கண்ணைத் திற” என்றது முனிவர் எறும்பு.

குட்டி எறும்பு கண்ணை திறந்தது. அதற்கு மிகவும் ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது. ஆமாம், அவர்கள் இருவரும் முனிவரின் மந்திர சக்தியால் வானில் பறந்து கொண்டிருந்தார்கள். காடு மிகவும் சின்னதாகவும் அதில் செல்லும் மிருகங்கள் சிறிதாகவும் தெரிந்தது.

முனிவர் எறும்பு ஒரு இடத்தைக் காட்ட அங்கே ஒரு சிங்கம் போய்க்கொண்டிருந்து. அதைச் சில மனிதர்கள் ஒரு கூண்டு வைத்துப் பிடித்துப் போனார்கள். இன்னொரு இடத்தில், ஒரு மானை ஒரு புலி வேகமாக உணவுக்காக துரத்திக்கொண்டிருந்தது. சில தூரம் போனதும் ஒரு யானைக்கூட்டம் தண்ணீர் தேடி தாகமாக வெகு தொலைவு நடந்து போய்க்கொண்டிருந்தது.

முனிவர் எறும்புக் குட்டியைப் பார்த்து, “இப்போது நீ என்ன கற்றுக்கொண்டாய்?” என்று கேட்டது.

“மிருகங்களுக்கும் கஷ்டம் உண்டு என்று தெரிந்துகொண்டேன். ஆனால் மனிதராக இருந்தால் நல்லது” என்றது.

அவர்கள் இன்னும் பறக்க, காட்டைத் தாண்டி ஊர்ப் பக்கம் வந்தார்கள். தெருவெல்லாம் வெறிச்சோடி இருந்தது.

“இதுதான் ஊரா… மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருப்பார்கள். சந்தோஷமாக வாழ்வார்கள் என்று அம்மா சொல்லுமே. இங்கே யாருமே இல்லையே..” என்றது முனிவரிடம்.

அதற்கு முனிவர் எறும்பு, “மனிதர்களும் உணவுக்காக உங்களைப்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். சமீபமாக கொரோனா என்ற கிருமி தாக்கி அவர்கள் இயல்பு வாழ்வு பாதித்திருப்பதால் அவர்கள் வாழ்வே மிகவும் கடினமாக ஆகிவிட்டது. அதுதான் எல்லோரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள்.” என்றது.

“அப்போது அந்த கிருமிதான் சக்தி வாய்ந்தா… அது மனிதரை விட பெரிதாக இருக்குமா” என்றது குட்டி.

“இல்லை அழகுக் குட்டியே. அது உன்னைவிட பல்லாயிரம் மடங்கு சின்னது. தவிர, சில நாளில் அதை அழிக்கவும் மருந்து கண்டுபிடித்துவிடுவார்கள் மனிதர்கள்” என்றது முனிவர். பின்னர் அவர்கள் சொந்த இடத்துக்கு திரும்பி வந்து ஒரு ஆற்றங்கரையோரம் இறங்கினார்கள்.

“இப்போது என்ன கற்றுக்கொண்டாய் ?” என்று கேட்டது முனிவர்.

“எது சிறந்தது என்று குழப்பமாக இருக்கிறது” என்றது குட்டி.

முனிவர் சிரித்தபடி, ”உலகில் வாழப் பிறந்தே சிறந்தது. இதில் பெரியவர், சிறியவர் என்று பாகுபாடு கிடையாது. அப்படி மனதில் தோன்றினால் உன்னைப்போல வருத்தமும், குழப்பமுமாய் இருக்கும். பிறப்பை ரசித்து, நம் வாழ்வை எந்தத் தயக்கமுமின்றி ஆசையாக வாழ்ந்தால் நம் வாழ்வு நன்றாக இருக்கும். யாராயிருந்தாலும் கஷ்டமும், நல்லதும் வரும். அதை மனதால் ஆராய்ந்து தவறுகளை சரி செய்து, நல்லபடியாக உழைத்து வாழ , வாழ்க்கை அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் “ என்றது முனிவர்.

“புரிந்துகொண்டேன். நான் எறும்பாய் பிறந்ததுக்கு பெருமை கொண்டேன். நானும் என் நண்பர்கள் போல தினமும் உழைத்து சந்தோஷமாக வாழ்வேன்” என்று சிரித்தபடி சொன்னது.

அதைப் பாராட்டிய முனிவர், அதற்கு ஒரு சர்க்கரைத் துண்டைப் பரிசளித்துவிட்டு, விடைபெற்றுக்கொண்டு, அங்கே இருந்த ஒரு காய்ந்த இலையை படகு போல் மாற்றி, ஒரு குச்சியை கையில் வைத்துக்கொண்டு, அந்த அமைதியான ஆற்றில் படகுபோல் சென்றது.

சர்க்கரைத் துண்டை மகிழ்ச்சியாக சாப்பிட்டபடி வீடு திரும்பியது குட்டி எறும்பு.

குழந்தைகளே நாமும் அந்த குட்டி எறும்புபோல, யாரையும் உயர்வு தாழ்வு நினைக்காமல், எல்லோரும் நன்றாக வாழவேண்டும் என்று சந்தோஷமாக வாழ்த்துவோமா?

எழுதியவர்: G.கவிதா

புனைபெயர்: ஜிகே நீதித்துறையில் பணி. பாலகுமாரன், ரமணிசந்திரன் நாவல்கள் படிப்பதில் ஆர்வம்.

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments