“பூர்ணிமா காய்கறி வாங்க மார்கெட் வரைக்கும் போகனும். கூட வரமுடியுமா? நீயும் வாங்கனும்ன்னு சொன்னாயே…”,

அடுத்த வீட்டுப்பெண் பூர்ணிமாவிடம் கேட்டாள்.

“அக்கா மதியம் போகலாமா? சாராவைத் தூங்க வச்சிட்டு வரேன்”. சாரா, ஐந்து வயது மகள். நிறைய துறுதுறுப்போடு.. மழலை மாறாமல் இருக்கும் பூஞ்சிட்டு… இவர்கள் வசிப்பது கோவை செல்வபுரம் பகுதியில்… சொந்த வீடு இரண்டு செண்ட்டில், சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பி இருக்க, எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதி இவர்கள் வசிக்கும் பகுதி..

மூன்று மணிக்கு மகளைத் தூங்க வைத்தவள் காய்கறி வாங்கப் புறப்பட்டாள். எப்படியும் ஐந்து மணி வரைக்கும் மகள் அசந்து தூங்குவாள். வேகமாக வாங்கி விட்டு வந்து விடலாம் எனப் புறப்பட்டாள்.

“அக்கா! சீக்கிரம் போகலாம். தூங்கி எழும் போது பக்கத்தில் ஆள் இல்லையினா ஆர்ப்பாட்டம் பண்ணிடுவா” எனப் பேசியபடியே வேகமாக வாங்கி விட்டு வீட்டை நோக்கி புறப்பட்டனர் இருவரும்…

வீட்டிற்கு வர வீட்டின் கதவு திறந்து இருந்தது.

“என்ன பூர்ணிமா.. வீடு திறந்து இருக்கு?” எனக் கேட்டபடியே அடுத்து இருந்த காம்பவுண்ட் கேட்டைத் திறந்தபடி உள்நுழைந்தாள் தன்வீட்டினுள் கலா”

“சாராவோட அப்பா வந்திருப்பாங்க.. காலையிலேயே உடம்புக்கு முடியலைன்னு சொல்லிட்டுப் போனாங்க..  போய் பார்க்கிறேன்” என்றபடி  வீட்டிற்குள் நுழைந்தாள் பூர்ணிமா.

ஹாலில் இருந்த டிவியில் நீயூஸ் சேனல் ஓடிக்கொண்டு இருக்க, இவளது கணவன் ரவி டிவியைப் பார்த்தபடியே…” என்ன பூர்ணிமா.. எங்கே போயிட்டு வர்ற, சாரா எங்கே?” எனக் கேட்டான்.

“என்ன ரவி.. அவள் தூங்கிட்டு இருந்தா.. அரை மணி நேரம் தானேன்னு விட்டுட்டு போனேன்.. பெட்ரூமில் தூங்கறா…”

“முகம் கழுவ பாத்ரூம் போனேனே பூர்ணிமா.. பெட்ரூம்ல் அவள் இல்ல. “

“நீங்கள் கவனித்து  இருக்க மாட்டிங்க.. நல்லா பாருங்க” என்றபடி சமையல் அறைக்குள், வாங்கி வந்த காய்கறிகளை வைக்கச் சென்றாள்.

“நான் என்ன பொய்யா சொல்லறேன் பூர்ணிமா.. வரும் போது சாரா இங்கே இல்ல. இரு பார்த்திட்டு வரேன்” மறுபடியும் பெட்ரூம்பிற்குள் தேடச்சென்றான். அங்கே சாரா இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. அடுத்த சில  நொடிகளில் இருவருக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

பூர்ணிமா அழ ஆரம்பித்திருந்தாள்.‌ “இல்ல… அவள் இங்கே தான் தூங்கினா எப்படி காணாமல் போக முடியும்.”

“அழாதே பூர்ணிமா. பக்கத்தில் தேடலாம்  எழுந்து வெளியே போய் இருந்தா…இரு பார்க்கலாம்…” வேகமாக வாசலுக்கு வந்து தேட ஆரப்பித்தனர். “அக்கா சாராவைப் பார்த்திங்களா?” என அருகே  இருக்கும் வீடுகளில் கேட்க ஆரம்பித்தனர்.

இருபதடி ரோடு.. அடுத்தடுத்து தெருக்கள் எனப் பரபரப்பாக இருக்க எங்கே தேடுவது எனத் தெரியாமல் கதவை வேகமாகச் சாத்தி விட்டு  புறப்பட்டனர். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் ஒருத்தர் விடாமல் தேடிவிட்டு மறுபடியும் வீட்டிற்கு வர சாரா எங்கேயும் இல்லை.

இப்போது கோபம் எல்லாம் பூர்ணிமா மேல் திரும்பி இருந்தது ரவிக்கு. “எல்லாம் உன்னால் தான்.. குழந்தையை  ஒழுங்கா பார்த்துக்கொள்ள முடியவில்லையா.  .”

“சும்மா என்னையவே குறை சொல்லாதிங்க… நீங்க வீட்டுக்கு வந்த நேரத்தில் தான் வெளியே போய் இருக்கனும். நீங்கள் தான் அவளைக் கவனிக்கலை… ஒரு வேளை குழந்தையை யாராவது கடத்தி இருப்பாங்களோ.. எனக்கு பயமாக இருக்கிறதுங்க…” ஏற்கனவே அழுது முகம் வீங்கி இருக்க,கண்ணீர் கன்னத்தில் வழிந்தது பூர்ணிமாவிற்கு…”

“வா பூர்ணி எதுக்கும் போலீசில் கம்ளைண்ட் பண்ணிடலாம் நீ சொன்ன மாதிரி பணத்துக்காக கடத்தி இருந்தா லேட் பண்ணப் பண்ண ரிஸ்க் தான் வா போகலாம்” வேகமாக மறுபடியும் வீட்டைப் பூட்டி விட்டு அருகில் இருப்பவரிடம் “அக்கா சாராவைக் காணோம்ன்னு கம்ளைண்ட் பண்ணப் போகிறோம்.. ஒரு வேளை அவள் வந்திட்டான்னா, எனக்கு உடனே ஃபோன் பண்ணுங்க” என  சொல்லி விட்டுப் புறப்பட்டனர்.

யமஹாவில் பின்புறத்தில் அமர்ந்தவள் சாலையின் இருபுறத்திலும் கண்கள் அலைபாய மகளைத் தேடியபடியே சென்றாள். வீட்டிற்கு அருகே வசிப்பவர்கள் கூட ஆளுக்கு ஒரு டூவிலரில் சாராவைத் தேடி ஆளுக்கு ஒரு பக்கமாக தேடிச்சென்று இருந்தனர்.

அழுதபடியே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் அளிக்க.. “அழாதிங்கம்மா குழந்தை கிடச்சிடும். என்ன கலர்ல டிரஸ் போட்டு இருந்தாங்க…” மேலும் விவரங்களைப் பதிவு செய்து பிறகு, “பக்கத்தில் எல்லா ஸ்டேஷனுக்கும் சொல்லிடுங்க..முருகன்! இவங்க கூட போய் வீட்டுப்பக்கத்தில் விசாரிச்சிட்டு வாங்க”, என அங்கே இருந்த கான்ஸ்டபிளிடம் சொல்லிஅனுப்பி வைத்தனர்.

இவர்களது வீட்டிற்கு வரவும் அருகில் நின்றவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்து இருந்தார் முருகன். குழந்தை வீட்டை விட்டு வெளியே வந்ததாக யாரும் கூறவில்லை.  அடுத்தடுத்த வீடுகளிலும் விசாரித்து விட்டு “ரவி..உங்கள் வீட்டையும் திறங்க.. அங்கேயும் எதற்கும் செக் பண்ணிடலாம். மொட்டை மாடிக்குப் போகிற வழி எங்கே இருக்கு. டேங்க்,டிரம் மாதிரி ஏதாவது இருந்தாலும் செக் பண்ணிடலாம் எதற்கும். .. குழந்தை தானே எங்கேயாவது ஒளிந்து கொண்டு கூட இருக்கலாம். “

“சரி வாங்க ஸார்.”

“நீங்க யார் மேலேயாவது சந்தேகப்படறிங்களா…ரவி.”

“எனக்கு சொல்ல தெரியலைங்க ஸார். பணத்துக்காக அப்படின்னு யோசிக்கவே முடியலை…”

“சரி..சரி.. வாங்க பார்க்கலாம்” எனக் கதவைத் திறந்து உள்ளே சென்றனர். முதலில் மாடியில் சென்று பார்த்துவிட்டு வர அங்கே சென்றதிற்கான அடையாளம் எதுவும் இல்லை. மறுபடியும் வீட்டிற்குள் வந்து தேடினார்கள். பாத்ரூம், பக்கெட் என்ன ஒளிந்து கொள்ளக்கூடிய இடத்தை எல்லாம்  பார்த்துவிட்டு  கடைசியாக பெட்ரூமிற்குள் வந்தவர், “கட்டில் மேல்தான் தூங்கிட்டு  இருந்தாளா உங்க பொண்ணு? எனக் கேட்டபடி சற்றே குனிந்து பார்க்க,கட்டிலுக்கு  அடியில் பெரிய டெடிபியர் பொம்மையை கட்டி அனைத்தபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் சாரா.

thedal

“ரவி சார்! இங்கே பாருங்கள்” என சத்தமாக முருகன் அழைக்க, இருவரும் ஓடி வந்தனர்.  இவரது சத்தத்தில் கண் விழித்துப் புது ஆளான முருகனைப் ன பார்க்கவும் அழ ஆரம்பித்தாள் சாரா…

 வேகமாக வந்து சாராவை வாங்கிக் கொண்ட பூர்ணிமா, சாரா  முகம் முழுக்க முத்தமிட  ஆரம்பித்தாள் அழுதபடியே,.. மூன்று மணி நேரமாக குழந்தை என்ன ஆகி இருக்கும் கடத்தி விட்டார்களோ இல்லை வேறு எதுவும் ஆகி விடுமோ என மனதில் அழுத்தி கொண்டு இருந்த பாரம் அவளைப் பார்த்ததில் கரைந்து கொண்டு இருந்தது பூர்ணிமாவிற்கு…

குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய வழிமுறைகளையும் காவல்துறை உதவி‌ எண்ணையும் வழங்கிவிட்டு, சில நிமிடங்களில் வழக்கை முடித்த சந்தோசத்தோடும், குழந்தைக்கு எந்த ஆபத்தும் இருந்திருக்கவில்லை என்ற நிம்மதியோடும் விடைபெற்றார் முருகன்.

முற்றும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments