சிவானி ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். கிச்சனிலிருந்து அவளது அப்பா குரல் கொடுத்தார்.

“சிவானி சாப்பிட வாடா” என அன்பாக அழைத்தார் ஷிவானியின் அப்பா ரகு.

“வேணாம் பா, எனக்கு பசிக்கல” என்றாள் சிவானி.

“தங்கம், நீ காலையிலயும் அரை தோசை தான் சாப்பிட்ட. இப்பவும் பசிக்கல ன்னு சொல்ற. அப்பா உனக்காக தான் காய்கறி சாதம் செஞ்சு வெச்சிருக்கேன். வா வந்து அப்பாவோட சேர்ந்து சாப்பிடு” என மீண்டும் அழைத்தார் ரகு.

“எனக்கு சாப்பாடு வேணாம், சாப்பிடவே பிடிக்கல” என்றவாறு டிவியில் மூழ்கிப் போனாள் சிவானி. அடம் பிடிக்கும் குழந்தையை என்ன செய்வது என தெரியாமல், தான் மட்டும் உணவு உண்டு தன்னுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்தார் ரகு.

சிவானியின் அம்மா ராதை தன்னுடைய ஆராய்ச்சி பணிக்காக அயல்நாடு சென்றிருந்தார்.

தந்தை வேலையைப் பார்க்க ஆரம்பித்ததும் அவரிடம் சென்ற சிவானி, “எனக்கு பசிக்குது, எனக்கு குர்குரே வேணும். சிப்ஸ் வேணும்” என கேட்டாள்.

“சிவானி பசிச்சா சாப்பாடு தான் சாப்பிடணும். நொறுக்குத்தீனி சாப்பிட கூடாது. அதுவும் குர்குரே, லேஸ் போன்ற பாக்கெட்டில் அடைத்த நொறுக்குத்தீனிகள் நிறைய ரசாயனங்கள் கலப்பார்கள். அது உடலுக்கு நல்லது இல்லை. அதனால் அப்பா உனக்காக நிறைய காய்கறிகள் போட்டு செய்த காய்கறி சாதத்தை சாப்பிடு” என்றார் ரகு.

“எனக்கு ஒண்ணும் வேணாம்” என்று கோபமாக அங்கிருந்து சென்ற சிவானி எதுவும் சாப்பிடாமல் படுத்து உறங்கி விட்டாள்.

சிவானி கண் விழித்து பார்க்கும்போது அவள் ஒரு தொழிற்சாலையில் இருந்தாள். அவளைச் சுற்றி கேட்ட இரைச்சலில் கண் விழித்த ஷிவானி அந்த பெரிய தொழில் கூடத்தை கண்டு வியந்து போனாள்.

அங்கே ஒரு பக்கம் நிறைய ஆட்கள் பெரிய பெரிய லாரிகளில் இருந்து உருளைக்கிழங்குகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு புறம் மக்காச்சோளங்களையும் இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

சிவானி ஓர் மக்காச்சோள விதையாக மாறி அதனுள் மாட்டிக் கொண்டிருந்தாள். அவள் இருந்த மக்காச்சோள விதைகளை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்று ஓர் குடோனில் அடைத்து வைத்தார்கள்.

பின் அங்கிருந்து ராட்சத கன்டெய்னர்கள் மூலம் ஒரு குழாயினுள் அனுப்பப்பட்டன. அங்கு பீச்சியடித்த நீரிலும் சுழன்று சுழன்று செல்லும் தட்டுகளிலும் ஒவ்வொரு மக்காச் சோளமும் உருண்டு உருண்டு போனது.

 குட்டி சிவானிக்கு கண்களில், உடம்பில் பீச்சியடித்த நீரால் பயங்கரமாக வலித்தது. மேலும் தட்டுகளில் சுழன்று சுழன்று சென்றாள். ரோலர் கோஸ்டரில் புரளுவது போல் உருண்டு சென்ற சிவானி ஆவென கத்தினாள்.

ஆனால் அவள் கத்துவதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை!. அவளோடு வந்த மற்றொரு சோளம் “டேய் ஏண்டா கத்துகிறாய், நம்மள குளிக்க வைக்கிறார்கள். மகிழ்ச்சியாக குளிடா” என்று சிவானியின் தலையில் நறுக்கென கொட்டி விட்டுச் சென்றது அந்த மக்காச்சோளம்.

பின், மேலே பட்ட நீர் காயும் அளவிற்கு ஓர் வெப்பப்படுத்தும் கருவியில் உருளும் தகடுகளில் மக்காச்சோள விதைகள் அனுப்பப்பட்டன.

 மிதமிஞ்சிய வெப்பத்தில் அவை உடனே காய்ந்து விரைப்பாக மாறின. அந்த சூட்டை சிவானியால் தாங்கவே முடியவில்லை. அவள் உடலெல்லாம் கொப்புளம் கொப்புளமாக வந்து புண்களாக மாறி விட்டது.

அதன் பின் அனைத்தும் ஓர் பெரிய அரைப்பானுக்குள் அனுப்பப்பட்டன. அந்த அரைப்பானில் மக்காச்சோளங்கள் கூட சிவானியும் சேர்ந்து கரகரவென அரைபட்டாள்.

அவளும் சோளமாவாக மாறிவிட்டாள். பின், அந்த சோள மாவுகளோடு மைதா மாவு சேர்க்கப்பட்டது.  பின் சிப்ஸ் தயாரிக்கும் இயந்திரத்திற்குள் அனுப்பப்பட்ட மாவு பலவகை ரசாயனங்களும் எண்ணெய்களும் சேர்க்கப்பட்டு பிசையப்பட்டது.  சிவானியும் அதனோடு சேர்ந்து பிசையப்பட்டாள்.

அதன்பின் சிப்ஸ் தயாரிக்கும் இயந்திரத்திற்குள் அனுப்பப்பட்ட மாவு வெவ்வேறு விதமான வடிவங்களில் வெளியே வந்தது. அவை மைக்ரோ ஓவன் எனப்படும் இராட்சத அடுப்புக்குள் அனுப்பப்பட்டு பொரிய வைக்கப்பட்டது. கொஞ்சமாய் இருந்த மாவு பெரிதாய் புசுபுசுவென நறுக் மொறுக்கென உண்ணும் படியாக பொங்கி வந்தது.

அங்கிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்ட அந்த நொறுக்குத்தீனிகள் மேல் பலவகையான கலவைகளால் ஆன மசாலாக்களும் தூவப்பட்டன. அதோடு சேர்ந்து அந்த உணவு கெட்டுப் போகாமல் இருப்பதற்கான ரசாயனங்கள் ,அந்த உணவிற்கு மனிதனின் மூளையை அடிமையாக்க கூடிய சுவை நரம்புகளைத் தூண்டக்கூடிய ரசாயனங்கள் என பல சுவையூட்டிகள் மணமூட்டிகள் தூவப்பட்டன.

அவற்றையெல்லாம் பார்த்து சிவானி அதிர்ச்சியடைந்து விட்டாள். இது எல்லாம் உடலுக்கு கேடான ரசாயனங்கள் என்று அவளது தந்தை சொல்வதைக் கேட்டு இருக்கிறாள்.  ஆனால் அவையெல்லாம் தூவப்பட்ட உணவுகளை அவள் விரும்பியது, அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

maayavanam3
படம்: அஜ்ஜிராஜ்

இவ்வளவு ரசாயனங்கள் தூவிய உணவை உண்டால் குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்படும் என்பது அவளுக்கு அப்போது தான் புரிந்தது .ஆனால் அவளே ஒரு சிப்ஸ் ஆக மாறிய பின் அவள் ஏன் சிப்ஸ் சாப்பிட போகிறாள்.

பாவம் சிவானி அவளே ஓர் நொறுக்குத் தீனியாக மாறிவிட்டாள். தன் மீது தூவப்பட்ட ரசாயனங்கள், சுவையூட்டிகள் மணமூட்டிகள் அதிக மேக்கப் போட்ட கோமாளி போல் தெரிந்தாள் ஷிவானி. அவை ஏற்படுத்திய நமச்சல் அவள் உடலெங்கும் அழிவை ஏற்படுத்தியது அந்த இடத்தில் இருக்கவே முடியாமல் மூச்சு முட்டியது ஷிவானிக்கு

மூச்சு விட முடியாமல் திணறியது அதிலிருந்து விடுபட போராடினாள்.

அந்தப் போராட்டத்தின் விளைவாக விரைவாய் உறக்கம் கலைந்து கண் விழித்தாள் சிவானி. அவளது கனவில் தான் அவள் சிப்ஸ் ஆக மாறியிருந்தாள்.

எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்கும் அவளது கனவு கடிகாரம், அவளுக்கு இன்று சில பாடங்களையும் கற்றுக் கொடுத்திருந்தது. அவள் கனவின் மூலமாக நொறுக்குத் தீனிகளின் தீமைகளை அவளுக்கு சொல்லிக் கொடுத்து இருந்தது கைக்கடிகாரம்.

தன்னுடைய கொடூர கனவிலிருந்து விழித்த ஷிவானி தந்தையிடம் சென்று காய்கறி சாதம் கேட்டு வாங்கி சமத்தாக சாப்பிட்டாள்.

குழந்தைகளா, கடையில விக்கிற பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் உடலுக்கு நல்லது இல்லை. அவற்றில் பல ரசாயனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சுவையூட்டிகள் மணமூட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உங்கள் வயிறு அவற்றை ஜீரணிக்க மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் விரைவிலேயே பழுதாகும் வாய்ப்பிருக்கிறது.

அதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நொறுக்குத்தீனிகளை கைவிட்டு சத்தான காய்கறிகள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். ஷிவானி திருந்திவிட்டாள். நீங்களும் சமத்துப் பிள்ளைகள் இல்லையா? மாறிடுவீங்க தானே சுட்டீஸ்?!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments