வணக்கம் பூஞ்சிட்டுகளே!

எல்லாரும் எப்படி இருக்கீங்க..

இந்த கொரோனா வந்ததும்  வந்தது! ஒரு இடத்துக்கும் போக முடியல.. அப்படியே போனாலும் முன்ன மாதிரி நிம்மதியா போய்ட்டு வர முடியல! பீச், பூங்கா, திரையரங்கம், நமக்கு பிடிச்ச கடைல நமக்கு பிடிச்ச சாப்பாடு இப்படி எல்லாத்தையுமே பழையபடி ரசிக்க கொஞ்சம் பீதியாத்தானே இருக்கு!

அதுக்காக  அப்படியே  உக்கந்துர முடியுமா..! நம்ம  பூஞ்சிட்டு வழியா மாசாமாசம் நம்ம செல்ல வாண்டுக் கூட்டத்த ஒரு குட்டி இணைய சுற்றுலா கூட்டிட்டுப் போனா என்னன்னு தோணுச்சு! அப்போ  வந்த எண்ணம் தான் இந்த  ஊர் சுத்தலாம் வாங்க பகுதி.

இந்தப் பகுதி வழியா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஊர் போகலாம்! அந்தந்த ஊரோட சிறப்பு சாப்பாடு, முக்கியமான இடங்கள், பேசும் மொழி, அங்க இருக்க குழந்தைங்க பள்ளி எப்படி இருக்கும்.. பூங்கா எப்படி இருக்கும்ன்னு ஜாலியா அலசலாம்!

என்ன தயாரா..

சரி, முதல்ல எந்த ஊர் போலாம்? ஒரே குழப்பமா இருக்கே.. வேற வழியில்ல! எல்லைகளே இல்லாம தன் வண்ண சிறகுகளை விரிச்சு உலகமெங்கும் சுட்டி குழந்தைகளோட பறக்கும் நம்ம  க்ளோபம்மா- அட அதாங்க நம்ம பூஞ்சிட்டு, அவங்ககிட்டயே  கேட்டுட  வேண்டியது தான்.

ஜெய் ஐஸலக்கா!

அத்திரி பத்திரி வாழக்கா!

எனக்கு வேணாம் பேரிக்கா!

வீட்டோரம் பூசணிக்கா!

மிதிச்சுப்புட்டா சுந்தரியக்கா!

நினச்சு நினச்சு நாள்கணக்கா

பறந்து போனா…

பறந்து போனா…க்கா

அமெரிக்கா!

ஆஹ் .. அவ பறந்து போனா அமெரிக்கா!

ஆஹா! உத்தரவு கிடைச்சிருச்சு.. கிடைச்சிருச்சு.. குழந்தைகளே! இன்னைக்கு நாம சுத்திப்பாக்கப் போற ஊர் அமெரிக்கா!

பொதுவா அமெரிக்காவுக்கு விமானத்துல தான்  போவாங்க. அதுலயும் இப்போ  கொரோனா டெஸ்ட் எல்லாம் எடுத்து, முகக்கவசம் போட்டுக்கிட்டு, டிக்கெட் எடுத்து, சீட் பெல்ட்  போட்டுட்டு விமானத்துல ஒரு 20 மணிநேரம் பயணம் பண்ணினா தான் வரும் அமெரிக்கா! அதெல்லாம் பொதுஜனத்துக்கு..!!

America
படம்: அப்புசிவா

நம்மக்கிட்ட தான் நம்ம உலகம் சுற்றும் பூஞ்சிட்டு இருக்கே! அது தான் நமக்கு விமானம்.

“பூஞ்சிட்டு பறக்கும் சேவை உங்களை அன்போடு அழைக்கிறது”

வாருங்கள் பறக்கலாம்..உலகை அளக்கலாம் நமது சிறகில்ன்னு பின்னாடி பாட்டெல்லாம் போட்டு பட்டயக் கிளப்பிப் பறக்கிறோம்..ரெடியா குட்டீஸ்..

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்!

அமெரிக்கா நம்ம இந்தியாவுக்கு அப்படியே அந்தப் பக்கம் இருக்கு..

அதாவது நம்ம வீட்டுக்கு  பின்னால இருக்கிற வீடு மாதிரி.கொல்லைப்பக்கத்துல இருந்து பின் வீட்டு வாண்டுகிட்ட என்ன தான் நாம சுலபமா நம்ம வீட்டுல இருந்தே பேசுனாலும், அவங்க வீட்டுக்குப் போறதுக்கு, நம்ம வீடத் தாண்டி, நம்ம வீடு இருக்கிற தெருவை தாண்டி, பக்கத்து தெருவைத் தாண்டி தான் அவங்க வீட்டுக்குபா போகனும். அதே மாதிரி தான் இந்தியா-அமெரிக்கா பயணம்.

கிட்டத்தட்ட 2 கண்டங்களைத்தாண்டி தான் அமெரிக்கா போகணும்.

இந்தியா ஆசியா கண்டத்துல இருக்கு. முதல்ல பக்கத்துல  இருக்கிற ஐரோப்பா கண்டத்துக்கு ஒரு தாவு.

அங்கே இருந்து வட அமெரிக்க்கா  கண்டத்துக்கு ஒரு தாவு. ரெண்டே தாவுல அமெரிக்கா!!

அப்புறம் முக்கியமான விஷயம். தாவும் போது கீழ பாத்துறாதீங்க..அப்படியே பாத்தாலும் பயத்த வெளிய காமிச்சிக்காதீங்க.. ஏனா, அமெரிக்கா போறதுக்குள்ள, இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல்ன்னு மூணு கடல்களத் தாண்டித் தான் போகணும்.. பயணம்ன்னா சாகசம் இல்லாமையா?!

சரி இப்போ கிளம்பலாமா?

முதல்ல பூஞ்சிட்டோட சிறகைக் கெட்டியாப் பிடிச்சுக்கோங்க.. முக்கியமா முகக்கவசம் பறந்துராம பாத்துக்கோங்க.

ரெடி! ஒன்னு…ரெண்டு..மூணு இதோ வந்துருச்சு அமெரிக்கா மண்ணு..

ஹப்பா பறவையா இருந்தா எவ்வளவு ஜாலி..

அமெரிக்காவோட தேசிய மொழி ஆங்கிலம். நாம  தான்  வெள்ளைக்காரங்கள விட  அதிகமா  ஆங்கிலம்  பேசுறோமே! அதனால நமக்கு பிரச்சினையே இல்ல.எல்லா இடத்துக்கும் கஷ்டமில்லாம நம்ம இஷ்டத்துக்கும்  சுத்தலாம்.

இப்போ நாம வந்து இறங்கின இடம்- லாஸ் ஏஞ்செல்ஸ்.

நம்ம ரசிச்சு ரசிச்சு பாக்குற டிஸ்னி படங்கள் ஆக்ஷன் படங்கள் சாகசப்படங்கள்ன்னு எல்லாம்

தயார் செய்யப்படுற ஹாலிவுட் இருக்கிற ஊர் தான் லாஸ்ஏஞ்செல்ஸ். சுருக்கமா ‘எல். ஏ’

அச்சச்சோ நாம இங்க பத்திரமா வந்து சேந்தத ஊர்ல நம்ம அம்மா அப்பாவுக்கு தெரியப்படுத்தணுமே.. ஒரு போனப் போட்டு சொல்லிருவோமா..

ஆஹ். குட்டிஸ் ஒரு ஸ்வாரஸ்யமான தகவல். நாம அமெரிக்கா இந்தியாவுக்கு பின்னாடி இருக்கும்ன்னு சொன்னேன்ல… அதனால இங்கே பகலன்னா அங்க ராத்திரி.. நம்ம ஊர்ல அங்க ராத்திரின்னா இங்க பகல்.

இப்போ இங்க அதாவது LAல திங்கக்கிழமை காலை எட்டுமணி.அப்போ நம்ம ஊர்ல திங்கக்கிழமை ராத்திரி எட்டு எட்டரை மணி இருக்கும். அப்பா அம்மா நாம பத்திரமா போய் சேந்துட்டோமான்னு நமக்காகக் காத்திருப்பாங்கள்ல, அவங்க தூங்கிறடைம்  வரதுக்குள்ள… வரதுக்குல்லா .. வ..ரா..  ஆ… ஆ…

அய்யய்ய என்ன இது.?!

காலைல 8 மணிக்கு இப்படி கொட்டாவி வருது. தூக்கம் வேற சுத்துதே!

ஒரு வேளை பயணக்களைப்பா இருக்குமோ..?!

அட. மறந்துட்டேன்! பயணக்களைப்பு மட்டுமில்ல! ஒரேஇரவுல ஒரேடியா பகல் இரவு தாண்டி பயணம் பண்ணதால, நம்ம உடம்பு  இன்னும் இதை ராத்திரி 8  மணின்னே நினைச்சுக்கிட்டு இருக்கு.. அதான் தூக்கம் வருது.. இதுக்குப் பேரு ஜெட்லாக்ன்னு (jet lag) சொல்லுவாங்க… உடம்பும் மனதும் இந்த ஊர் பகல் இரவு நேரத்துக்கு பழகுற வரைக்கும் இப்படித் தான் நம்ம ஊர் நேரப்படியே பசி தூக்கம். எல்லாம் … எல்லா.. ல்லா …ஆஆ..

ச்ச… மறுபடியும் கொட்டாவி!

முதல்ல அம்மா அப்பாக்கு போன போட்டு தகவல் சொல்லிட்டு.. ஒருகுட்டி தூக்கம்… போடணும்.. சரி சிட்டூஸ்… நான் ஜெட்லாக் எல்லாம் சரி ஆனதும் வரேன்.. இப்போதைக்கு.. டா.. ஆ.. டாட்டா.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments