Bheema

குட்டி பீமா தன் தங்கை மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சின்னச் சண்டை ஏற்பட்டு விட்டது. பீமா கோபத்தில் பென்சிலைத் தூக்கி எறிய அதன் கூரிய முனை மித்ராவின் கண்களுக்கு அருகில் பட்டுவிட்டது. கண்களுக்கு அருகில் ஒரு சிறிய ரத்தக் காயம். அதுபோக கண்களும் சிவந்து விட்டன. பதறிப்போன அம்மாவும் அப்பாவும் மித்ராவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பீமா பின்னாலேயே ஓடிச் சென்றான்.

 “டாக்டர்! பாப்பாவோட கண்ணுல தம்பி பென்சிலால் குத்திட்டான் டாக்டர்!” அம்மா கூற,

“அச்சச்சோ! இங்கே காட்டுங்க பார்ப்போம்..”

 கையிலிருந்த டார்ச்சின் வெளிச்சத்தை மித்ராவின் கண்களில் பாய்ச்சிய மருத்துவர்,

“நம்ம பீமா குட்டி ரொம்ப நல்ல பையன் ஆச்சே? எதுக்காக இப்படி நடந்துக்கிட்டான்?”

“என்னோட பென்சில், கிரேயான் எல்லாத்தையும் எப்பயும் இவ எடுத்துக்கிட்டே இருக்கா டாக்டர்.. அதான் கோவத்துல தூக்கிப் போட்டுட்டேன்! இனிமே அப்படி செய்யமாட்டேன். ரொம்ப அடிபட்டுடிச்சா பாப்பாவுக்கு?  கண்ணு நல்லா ஆயிடுமா?”

“நல்ல வேளை கூர்மையான பொருள் பக்கத்துல வரும் பொழுது கண் தன்னாலேயே மூடியிருக்கு.. மித்ரா கொஞ்சம் தலையையும் திருப்பிக்கிட்டா போல.. அதனால கண்ணுக்கு பக்கத்துலதான் பென்சில் பட்டிருக்கு.. இருந்தாலும் வெள்ளை விழியிலும் கொஞ்சம் அடிபட்டுருக்கு.. சொட்டுமருந்து போட்டு, ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்தா ரெண்டு நாள்ல சரியாயிடும். பென்சில், பேனா, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களைக் கண்ணு கிட்ட கொண்டு போகக் கூடாது. கண் ஒரு குட்டி பலூன் மாதிரி. பலூன்ல பென்சில் பட்டால் என்ன ஆகும்?”

“உடைஞ்சு போய்டும் டாக்டர்!”

“அதேதான்! கருவிழியில் பட்டிருந்தா இன்னும் ஆபத்தாய் இருந்திருக்கும். சிலருக்கு பார்வையே போயிடும். அதனால இனிமே என்ன பண்ண கூடாது?” மித்ராவை நோக்கிக் கேட்டார் மருத்துவர்.

“சண்டை போடக்கூடாது டாக்டர்!” மித்ரா கூறினாள். அப்படியே கைகளை கொண்டு போய் கண்களில் தேய்க்கப் போனாள். கைகளை வாஞ்சையுடன் பிடித்துக் கொண்ட மருத்துவர்,

“என்ன பிரச்சனை வந்தாலும் கைய வச்சு கண்ணைத் தேய்க்கக் கூடாது.. அது கண்ணுக்கு தேவையில்லாத அழுத்தத்தைக் கொடுக்கும்.. சின்னக் காயங்களைப் பெரிதாக்கிடும்”

“தூங்கும் முன்னாலயும் கண்ணைத் தேய்ச்சுக்கிட்டே இருக்கா டாக்டர்..” பீமா, மித்ராவின் அம்மா மருத்துவரிடம் புகார் கூறினார்.

“ரொம்ப நேரம் டிவியும் செல்போனும் பாக்குறாங்க டாக்டர்” என்றார் அப்பா.

அடுத்த புகார் வந்ததால் பீமாவின் தலை குனிந்தது.

“டிவி பாக்குறது தப்பு இல்ல.. ஆனா அதிக நேரம் தொடர்ச்சியாப் பார்த்து கண்ணை முழுசா கெடுத்துக்கிறது நல்லதா? இல்ல தினமும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் மட்டும் பார்த்து வாழ்க்கை முழுசா பாக்குற அளவுக்கு கண்ணை ஆரோக்கியமாக வச்சுக்கிறது நல்லதா? நீ சொல்லு மித்ரா..” என்றார் மருத்துவர்.

“தினமும் கொஞ்ச நேரம் மட்டும் டிவி பாத்தா பாட்டி ஆகுற வரைக்கும் பார்க்கலாமா டாக்டர்?” மித்ரா ஆர்வத்துடன் கேட்க அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

” நிச்சயமா! அதேமாதிரி தொலைக்காட்சியை நல்ல தூரமா உக்காந்து பாக்கணும்.. படிக்கும் போது நல்ல வெளிச்சம் வச்சுக்கணும். தூங்குறதுக்கு அரை மணி நேரம் முன்னாடி டிவி, லேப்டாப், செல்ஃபோன் மாதிரி மின்னணு சாதனத்தை பயன்படுத்துறத நிறுத்தணும். அப்புறம் கீரை எல்லாம் சாப்பிடுறீங்களா?”

“அதெல்லாம் ரெண்டு பேருமே நல்லா சாப்பிடுவாங்க டாக்டர்! அந்த விஷயத்தில குறை சொல்ல முடியாது” பீமாவின் அப்பா கூற,

“வெரி குட்! ரொம்ப நல்லது.. இந்தாங்க சொட்டு மருந்து எழுதித் தந்திருக்கேன். அதை மட்டும் போடுங்க. ஆல் த பெஸ்ட்! டாட்டா!” என்று விடை கொடுத்தார் மருத்துவர்.

Bheema 1
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments