Iyarkai

அதிகாலைச் சூரியன் சாளரத்தின் வழியே தூங்கும் பூக்குவியலின் மேல் பட்டது. வெளிச்சத்தின் தாக்கத்தால் தூக்கம் கலையவும் சிணுங்கியபடியே அழைத்தாள் தன் தாயை. 

“ம்மா.. ம்மா.. வெயில் போகச் சொல்லு…”, என தூக்கத்தில் உளறினாள். 

“என் தங்கக்கட்டிக்கு இன்னும் தூக்கம் தெளியலியா?”, எனக் கூறியபடியே தாயவள் சாளரத்தை நன்றாகத் திறந்து விட்டாள்.

காலைக் காற்றும், ஒளியும் அறை முழுக்க பரப்ப திரைச்சீலைகளை விலக்கிக் கட்டினாள். 

“ம்மா….. வெயில் போ சொல்லு…. தூக்கம் வருதும்மா”, என சிணுங்கியபடி மீண்டும் கூறினாள் ஆறு வயது நனியிதழ். 

“இதழ் குட்டி…. நேத்து சூரியன் உதிக்கறப்ப பாக்கணும்னு சொன்னல்ல…  இன்னும் தூங்கினா எப்படி டா?”, தாய் இன்னிசை. 

“சூரியன் வந்துரிச்சாம்மா….”, எனத் தூக்கம் கலைந்து எழுந்து கேட்டாள் நனியிதழ். 

“சூரியன் வந்தா தானே வெயில் வரும் குட்டிம்மா”, இன்னிசையும் குழந்தை போலவே முகபாவம் மாற்றிக் கூறினாள். 

“அது ஏன்மா தினம் என்கிட்ட சொல்லாமலே வருது?”, என தன் அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டாள் நனியிதழ். 

“அதோட டைம் காலை ஆறு மணி டா. யாருக்காகவும் காத்திருக்காம அதோட வேலைய அது ஆரம்பிச்சிடும்… அது உதிக்கறப்ப பாக்கணும்னா நாம தான், அந்த நேரத்துக்கு எந்திரிக்கணும்”, என நனியிதழுக்கு போர்வை மடிப்பதை சொல்லிக்கொடுத்தபடிக் கூறினாள் இன்னிசை. 

“அது எப்படிம்மா தினம் ஒரே மாதிரி ஒரே நேரத்துக்கு வருது?”, நனியிதழ். 

“அது இயற்கை டா. சூரியன் தான் நம்ம பூமிக்கு ஆதாரம். அது இல்லைன்னா எந்த உயிரும் இங்க வாழ முடியாதுடா”, இன்னிசை. 

“இயற்கைன்னா என்னம்மா?”, என நனியிதழ் கன்னத்தில் கைவைத்து யோசித்தபடிக் கேட்டாள். 

“அது ரொம்பப் பெரிய விஷயம். அம்மா தினம் தினம் உங்களுக்கு ஒன்னு ஒன்னா சொல்வேனாம். நீங்க இயற்கைன்னா என்னன்னு தெரிஞ்சிகிட்டே அத பாதுகாப்பீங்களாம் சரியா?”, இன்னிசை நனியிதழை அழைத்துக்கொண்டு பின்பக்க தோட்டத்திற்கு அழைத்து வந்து முகம் கழுவி வாய் கொப்பளிக்க வைத்தாள். 

“பாதுகாக்கறதுன்னா என்னம்மா?” நனியிதழ். 

“அப்பா என்னை, உன்னை, தாத்தா, பாட்டி எல்லாரையும் பத்திரமா பாத்துக்கறாருல்ல… அது தான்டா…. “, இன்னிசை. 

“எப்படிம்மா?” என உதடு பிதுக்கி அழகாய்க் கேட்டாள் குழந்தை நனியிதழ். 

“உன்ன வெளி ஆளுங்க யாரும் திட்டாம, அடிக்காம, உன்ன காயப்படுத்தாம பாத்துக்கறாருல்ல… அதுக்குப் பேர் தான் பாதுகாக்கறது”, இன்னிசை அவளுக்கு புரியும் விதத்தில் கூறினாள். 

“ஓஓ… சரி சொல்லும்மா இயற்கைன்னா என்ன?”, நனியிதழ். 

“வானம், இந்த பூமி, சூரியன், நிலா, செடி, மரம்ல இருந்து இந்த பூமில வாழற எல்லாமே இயற்கை தான்டா… இயற்கை இல்லைன்னா நாம வாழமுடியாது. அது தான் சாமி”, இன்னிசை. 

“இதை எல்லாம் நாம எப்படிம்மா பாதுகாக்க முடியும்? அது நம்மள விட தூரமா உயரமா இருக்குல்ல மா”, நனியிதழ். 

அவளின் கேள்வியில் வியந்தாலும் சின்னசிரிப்புடன், “சரிதான் டா. நாம நிக்கற, நடக்கற இந்த பூமிய பாதுகாக்கணும் டா. இந்த மண், தண்ணி, காத்து எல்லாமே சுத்தமா இருந்தாத் தான் உன்னப் போல நிறைய குட்டி பசங்க அடுத்தடுத்து வரப்ப நீங்க ஆரோக்கியமா சந்தோஷமா வாழ முடியும். அதனால இதுல்லாம் சுத்தமா பத்திரமா பாத்துக்கணும்”, இன்னிசை. 

“அது எப்படிம்மா பாத்துக்கறது?”, நனியிதழ். 

“மரங்களை அனாவசியமா வெட்டக்கூடாது. தண்ணில பிளாஸ்டிக் குப்பையைக் கொட்டக்கூடாது. புகை அதிகமா வந்தா காற்று மாசுபடும். அதனால வண்டி தேவைபட்டா மட்டும் தான் உபயோகிக்கணும். இதுல்லாம் நாம பண்ணலாம்”, இன்னிசை. 

“ஓஓஹோ… அம்மா… இன்னொரு சந்தேகம்”, நனியிதழ் கன்னத்தில் கைவைத்து யோசித்தபடிக் கேட்டாள். 

“என்னடா?”, இன்னிசை. 

“நேத்து நம்ம வீட்டு முன்ன இருந்த மரத்த ஏன்மா வெட்டுனாங்க?”, நனியிதழ். 

“ரோட் போடறாங்களாம் டா. அதனால வெட்டிட்டாங்க”, இன்னிசை. 

“ரோட் நம்ம வீடு வரைக்கும் வரலியே அப்பறம் ஏன் அனாவசியமா மரத்த வெட்டினாங்க? நீங்க ஏன் அவங்கள இயற்கைய பாதுகாக்க சொல்லல?”, நனியிதழ் இடுப்பில் கைவைத்து சற்றுக் கோபத்துடன் கேட்டாள். 

இன்னிசை என்ன பதில் சொல்வதென்று யோசித்த சமயம் அவளது கணவனும், மாமியாரும் புதிதாய் ஐந்து மரக்கன்றுகளுடன் வந்தனர். 

“ஒரு மரத்த வெட்டினதுக்காக ஐஞ்சு மரம் வைக்கப் போறோம் நனிக்குட்டி”, என அமுதன் கூறியபடி உள்ளே வந்தான். 

“வாவ் ….. அப்ப இதே போல ஒரு மரம் வெட்டிட்டா ஐஞ்சு புது மரம் வச்சா இயற்கை பாதுகாப்பா இருக்கும்ல ம்மா?”, நனியிதழ் முகத்தில் சந்தோஷம் மின்னக் கேட்டாள். 

“ஆமாடா….. மரம் தான் ஆதாரம் எல்லாத்துக்கும். மரம் அதிகம் வளர்க்கணும்”, இன்னிசை புன்னகையுடன் கூறினாள். 

“ஹைய்யா…  நான் மரம் வச்சி தினம் தண்ணி ஊத்தி இயற்கையப் பாதுகாக்கப் போறேன்…. அப்பா! நான் மரம் வைக்கறேன்”, என பின்பக்கம் ஓடினாள் நனியிதழ். 

சமையலறையில் வேலை செய்தபடியே இன்னிசை சாளரத்தின் வழியே பார்க்க , நனியிதழ் மரக்கன்றுகளை ஒவ்வொன்றாய் பாட்டி மற்றும் தந்தையுடன் சேர்ந்து மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். 

இன்னிசை மனதில் இதமான உணர்வு ஏற்பட்டது தன் மகளுக்கு இயற்கையின் மேல் சிறு துளி அக்கறை தோன்றியதற்காக…

வளர வளர அந்த அக்கறையும் நிச்சயம் வளரும் என்பதில் அக்குடும்பத்தினருக்கு இனி ஐயமில்லை… 

இயற்கையை காப்போம்……

Iyarkai 1

ஆசிரியர் பற்றி

ஆலோன் மகரி எனும் புனைபெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் நந்தினி வெங்கடேசன். கதை, கவிதை, நாவல் பிரதிலிபியில் எழுதி வருகிறார்.அர்ஜுன நந்தன் இவர் எழுதிய முதல் நாவல்.


What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
4 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments