அரசர் வீரமகேந்திரர் பட்டத்தரசி எழினியிடம் மலைக்கோட்டை மாயாவியின் நிபந்தனையை எடுத்துச் சொன்னதுமே பட்டத்தரசி எழினி துடித்துப் போய் விட்டாள்.

“என்ன இது அநியாயம்? இரண்டு கண்களில் எந்தக் கண் வேண்டும் என்றால் என்ன சொல்ல முடியும்?”

 தங்களுடைய கண்ணின் மணியான இளவரசியை மாயாவியிடம் தூக்கிக் கொடுக்கவும் தாய் மனதிற்கு விருப்பமில்லை.

ஆனால் நாட்டு மக்களும் அவர்களுக்குக் குழந்தைகள் தானே! அவர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை இழந்து துயரத்தில் துடிப்பதையும் பார்த்துக் கொண்டு கையைக் கட்டிக் கொண்டு இருக்க முடியாதே! அவர்களைப் பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமை தானே!

“எந்த முடிவை எடுத்தாலும் நமக்கு இழப்பு தான்” என்று கலங்கினாள்.

“ஆம் தேவி, அதனால் தான் எங்கு இழப்பு குறைவாக இருக்கிறதோ அதை நாம் எடுக்க வேண்டும். இளவரசியை மறந்து அவளை மாயாவியிடம் ஒப்படைத்து விட்டு நாம் இருவரும் நிம்மதியாக வாழப் போவதில்லை. ஆனால் நமது இந்தச் செயலால் நாட்டில் இருக்கும் மற்ற அனைத்துக் குழந்தைகளையும் நாம் காப்பாற்றி விடலாம் அல்லவா? இளவரசியை மாயாவியிடம் ஒப்படைத்து விட்டால் இனி வேறு எந்தக் குழந்தையையும் கவர்ந்து செல்ல மாட்டேன் என்று அவன் உறுதியளிக்கிறான். யுத்தத்தினால் ஏற்படும் சேதத்தையும் நாம் தடுத்து நிறுத்தலாம்” என்று வீரமகேந்திரர் கூற, அரசி எழினியும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவருடைய விவேகமான முடிவை ஏற்றுக் கொண்டாள்.

இளவரசியைச் சுமந்து கொண்டு இந்த முறை அரசியும் அரசருடனே கிளம்பி, எல்லையில்லா போர் நடந்த இடத்திற்கு வந்தாள். படைவீரர்களும் நாட்டு மக்களும் தங்களுடைய நலனுக்காக அரசரும் அரசியும் எடுத்த முடிவைப் பற்றித் தெரிந்ததில் இருந்து அந்த இடத்தில் கூட்டமாகக் கூடிவிட்டார்கள்.  மனம் நெகிழ்ந்து போய் நின்று கொண்டிருந்தார்கள்.

மூன்று வயது கூட நிரம்பாத அந்தக் குழந்தை, தனது தாய் தந்தையரைப் பிரியப் போவதைப் புரிந்து கொள்ளவில்லை. தனது அழகு முகத்தில் சிரிப்போடு, தன்னைச் சுற்றி நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அரசரின் பரிவாரம் அந்த எல்லைக்கு வந்து சேர்ந்தது எப்படித் தான் அந்த மாயாவிக்குத் தெரிந்ததோ? அவர்கள் வந்தவுடனே அவனும் வந்து விட்டான்.

அரசியின் கைகளில் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டான். அன்று என்னவோ அவனுடைய முகம் அமைதியாகவே இருந்தது.

“அரசே, என்னுடைய நிபந்தனையை நீங்கள் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி தருகிறது. நான் உங்களுக்குத் தந்த உறுதிமொழியின் படி இனி உங்களுடைய நாட்டில் இருந்து எந்தக் குழந்தையையும் கடத்த மாட்டேன். அரசியாரே, உங்கள் குழந்தையின் உயிருக்கு ஊறு விளைவிக்க மாட்டேன். கவலையில்லாமல் செல்லுங்கள்” என்று சொல்லி விட்டு மாயமாக அங்கிருந்து மறைந்து விட்டான்.

கண்ணீருடன் அரசி எழினி நிற்க, அரசர் அவரை அழைத்துக் கொண்டு தலைநகரத்தில் இருந்த அரண்மனையை நோக்கிச் சென்றார். அங்கு குழுமியிருந்த மக்கள் கண்ணீருடன் அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்தத் தகவலை துருவனின் தந்தை சொல்லி முடித்ததும் துருவன் மனதில் மாயாவியைச் சந்திக்கும் ஆர்வம் தோன்றியது.

“தந்தையே, நான் சென்று இளவரசியை மீட்கும் முயற்சி செய்யட்டுமா?”

“நீ இளவரசியைக் காப்பாற்ற‌ ஆர்வம் காட்டுவது  நல்ல செயல் தான் துருவா.

ஆனால் அந்த மாயாவியுடன் போரிட்டு அவனை வெல்வது மிகவும் கடினம். அரசரே அதனால் தானே இளவரசியைத் தியாகம் செய்யத் துணிந்தார்! அவன் மாயாஜாலங்கள், மந்திர தந்திரங்கள் எல்லாம் கற்றவன். மலைக்கோட்டையின் மேலே அமைந்திருக்கும் அவனுடைய கோட்டையை நெருங்குவதே மிகவும் கடினம். காட்டுப் பாதையில் கொடிய மிருகங்களும் விஷப் பூச்சிகளும் அதிக அளவில் உண்டு. அந்த மலை மேல் ஏறுவதற்குக் கூடப் பலர் முயற்சி செய்து தோல்வியுற்றார்கள். நீ ஒரு சிறுவன். உன்னால் என்ன செய்ய முடியும் துருவா? உயிருக்கு ஆபத்தான முயற்சி இது” என்று பொன்னன் சொன்னான்.

“தந்தையே, அப்படி யாருமே முயற்சி செய்யாமல் இருந்தால் இளவரசியை யார் தான் காப்பாற்றுவார்கள்? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்களே! கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டினால் ஏதாவது வழி கிடைக்கும். நீங்களும் அம்மாவும் எனக்கு ஆசி அளித்து விடை கொடுங்கள். நாட்டு நலனுக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்த அரசருக்கு நாம் பதிலுக்கு ஏதாவது செய்து நமது நன்றிக்கடனைத் தீர்க்க வேண்டாமா? நான் நாளையே புறப்பட்டு முதலில் தலைநகருக்குப் போகிறேன். அங்கே அரசர், அரசியாரைச் சந்தித்து அவர்களுடைய ஆசிகளைப் பெற்றுக் கொண்டு இளவரசியை மாயாவியிடம் இருந்து மீட்க முயற்சி செய்யப் போகிறேன்” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டான்.

பொன்னனுக்கும் பொற்கிளிக்கும் தங்களுடைய மகனின் சொற்களைக் கேட்டுப் பெருமையாக இருந்தாலும் மனதில் அச்சமும் தோன்றியது. ஆனாலும் அவர்களுக்கு துருவனைப் பற்றி நன்றாகத் தெரியும். ஒரு முடிவை எடுத்தால் அதில் உறுதியாக நிற்பான்.

அடுத்த நாள் அதிகாலையில் துருவன் தனது புல்லாங்குழலை மட்டும் தன்னுடன் எடுத்துக் கொண்டு தலைநகரத்துக்குக் கிளம்பி விட்டான்.

பொற்கிளி அவனுக்கு வழியில் உண்பதற்கான உணவுப் பொருட்களையும் சில பழங்களையும் கட்டிக் கொடுத்தாள். பொன்னனும் தனது சேமிப்பில் இருந்த சில வெள்ளி நாணயங்களை துருவனின் வழிச்செலவுக்காகக் கொடுத்தான்.

மனம் நிறைய நம்பிக்கையுடனும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் துருவன் வீட்டை விட்டு வெளியே காலடி வைத்தான். தலைநகரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த பின்னர் தலைநகரின் வெளியே இருந்த ஒரு பெரிய தோப்பை அடைந்தான். அங்கே நிறையப் பழ மரங்கள் இருந்தன. பழுத்த பழங்கள் பல அங்கிருந்த மரங்களில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தன.

பழங்களைப் பறித்து வயிறார உண்டு விட்டு ஒரு மரத்தடியில் சாய்ந்து அமர்ந்தான். அவனுடைய அம்மா அவனுக்காகக் கட்டிக் கொடுத்திருந்த உணவு தீர்ந்து போயிருந்தது. வழியில் பசியுடன் வழிப்பயணம் செய்தவர்களுடன் அவன் தனது  உணவைப் பகிர்ந்து கொண்டதில் விரைவில் தீர்ந்து விட்டது. அன்னத்தைப் பகிர்ந்து உண்பது மிகவும் நல்ல பண்பல்லவா?

வயிறு நிறைந்ததும் தன் இடையில் சொருகி வைத்திருந்த குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். கண்களை மூடிக் கொண்டு அந்த இசையில் தன்னையே மறந்து அமர்ந்திருந்த அவனுக்குத் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயம் எதுவுமே தெரியவில்லை.

அவனுடைய குழலின் நாதம் அந்த இடத்தில் காற்றில் பரவியது. அங்கிருந்த மரங்களும் செடிகளும் கொடிகளும் மகிழ்ச்சியுடன் காற்றில் அசைந்ததில் அங்கே இனிய தென்றல் வீசியது. பல்வேறு பறவைகளும் அணில் போன்ற சிறிய உயிர்களும் இசையில் மயங்கி அவனைச் சூழ்ந்து நின்றன. மெய்மறந்து இசையில் கிறங்கி நின்றன. இசையின் மகிமையே அது தானே!

நீண்ட நேரம் குழல் வாசித்த துருவன் குழல் வாசிப்பதை நிறுத்தி விட்டுக் கண்களைத் திறந்து பார்த்தவன் தன்னைச் சுற்றி நின்றிருந்த சிறு உயிரினங்களையும் பறவைகளையும் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனான்.

ஒரு பஞ்சவர்ணக் கிளி பறந்து வந்து அவன் தோளில் அமர்ந்து பேசத் தொடங்கியது.

“அண்ணா, அண்ணா, யார் நீங்கள்? நீங்கள் வாசித்த புல்லாங்குழல் இசையில் நாங்கள் எல்லோரும் மயங்கிப் போய் விட்டோம். இவ்வளவு இனிமையான இசையை நாங்கள் இது வரை கேட்டதேயில்லை. இதோ இனிமையாகக் கூவும் இந்தக் குயில் கூடக் கூவுவதை நிறுத்தி விட்டு இரசித்துக் கொண்டிருக்கிறது பாருங்கள்” என்று மடமடவென்று மனிதர்களைப் போலவே பேசிய அந்தக் கிளியை, துருவன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“பேசுகின்ற கிளியை நான் இது வரை பார்த்ததேயில்லை. என் பெயர் துருவன். இந்த நாட்டின் எல்லைக்கருகில் இருக்கும் புதுவயல் என்ற கிராமத்தில் எனது தாய் தந்தையுடன் வசிக்கிறேன். விவசாயம் தான் எங்களுடைய தொழில்.

இந்த நாட்டின் இளவரசியை மலைக்கோட்டை மாயாவி கவர்ந்து சென்ற விவரத்தை என் தந்தையிடம் இருந்து தெரிந்து கொண்டேன். நான் சென்று இளவரசியை மீட்டு வரப் போகிறேன். கிளம்புவதற்கு முன்னால் அரசரைச் சந்தித்து இளவரசியைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காகத் தலைநகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். உங்களையெல்லாம் வழியில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்”

என்று துருவன் சொன்னான்.

மலைக்கோட்டை மாயாவி என்ற பெயரைக் கேட்டவுடனே  அங்கிருந்த பறவைகள் சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு தங்களுடைய அச்சத்தை வெளிப்படுத்தின.

“உங்களுக்கெல்லாம் அவனைப் பற்றித் தெரியுமா” என்று கேட்கப் பஞ்வர்ணக்கிளி அவனுக்கு விடை கூறியது.

“மகாக் கொடியவன் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அவனை எதிர்த்துப் போராடப் போகிறீர்களா? என் பெயர் கிள்ளி. நானும் உங்களுடன் வரட்டுமா?” என்று அந்தக் கிளி கேட்டது.

“இப்பொழுது இருள் சூழ ஆரம்பித்து விட்டது. நான் இன்றிரவு இந்தத் தோப்பிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு விட்டு நாளை காலையில் கிளம்பி அரண்மனைக்குச் செல்லப் போகிறேன். திரும்பி மலைக்கோட்டைக்குச் செல்லும் போது என்னுடன் நீயும் வரலாம். எனக்கும் வழியில் பேச்சுத் துணையாக இருக்கும்” என்று சொல்லி விட்டு உறங்கச் சென்றான்.

-தொடரும்

( துருவன் அரசனைச் சந்திப்பானா? அரசர் அவனுக்கு அனுமதி தருவாரா மாட்டாரா? கிள்ளி என்ற பேசும் கிளியும் துருவனுடன் பயணிக்குமா? அடுத்த பாகத்தில் பார்க்கலாமா, செல்லங்களே!)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments