“ஹாய் செல்ல பட்டூஸ்! வந்துட்டேன் வந்துட்டேன், நான் உங்க பிண்டு வந்துட்டேன்!”

அனு, “நானும் வந்துட்டேன் ஃப்ரெண்ட்ஸ், இன்னிக்கு நம்ம என்ன அறிவியல் ஆராய்ச்சி பண்ணப் போறோம் பிண்டு?”

“அதுவா அதன் பெயர் ‘வழலையில் இயங்கும் வண்டி’, அதாவது சோப்பை உபயோகப்படுத்தி இயங்கும் கப்பல்”

“ஹையா! ஜாலி, ஜாலி! சரி பிண்டு, நீ கடகடன்னு தேவையான பொருட்களை சொல்லுவியாம், நான் எடுத்துத் தருவேனாம்” என்று அனு மகிழ்ச்சியுடன் சொல்ல, பிண்டு தேவையான பொருட்களைச் சொல்ல ஆரம்பித்தது.

தேவையான பொருட்கள்

  • நுரைத் தட்டு ( ஃபோம் ட்ரே) அல்லது நெளி அல்லாத அட்டை ( நான் காருகேடட் கார்ட்போர்ட்) – ஒன்று
  • பெரிய தட்டு அல்லது ட்ரே – ஒன்று
  • திரவ நிலையில் உள்ள வழலை (லிக்விட் டிஷ் சோப் ) – சிறிதளவு
  • பல் குத்தும் குச்சி ( டூத் பிக்) – ஒன்று
  • தண்ணீர் – ஒரு பாட்டில்.
  • சிறிய தட்டு – ஒன்று

செய்முறை

 பிண்டு, “அனு, முதலில் பெரியவர்கள் உதவியோட கார்ட்போர்ட் அட்டையை, நான் சொல்லும் வடிவத்தில் வெட்டிக்கோ. அந்த வடிவம் இரண்டு இஞ்ச் அளவு இருக்கும்படி பார்த்துக்கணும்” என்று கூற,

அதன்படியே அனு அவளின் தாயின் உதவியோடு, கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவம் போல் அந்த அட்டையை கத்தரித்து எடுத்து வந்தாள்.

soap boat

“வெரி குட் அனு, அடுத்து அந்த தண்ணீர் பாட்டிலில் உள்ள தண்ணீரை எடுத்து அந்த ட்ரேயில் ஊத்திக்கோ”.

“ஊத்திட்டியா? வெரிகுட்! அடுத்தது லிக்விட் சோப்பை எடுத்து சிறிதளவு தட்டில் ஊற்றிக் கொள்”.

இப்போது டூத் பிக்கை அந்த லிக்விட் சோப்பில் நனைத்து, அதை நாம் வெட்டி வைத்த கப்பல் வடிவத்தின் பின்புற பக்கவாட்டில் தடவ வேண்டும்.

“கப்பலோட பின்புறத்தை எப்படி கண்டுபிடிப்பது பிண்டு?” என்று அனு சந்தேகம் கேட்டாள்.

பிண்டு, “கூரிய முனையின் எதிர்ப்புறம் இருக்கிது தான் பின்புறம், அங்கே தான் லிக்விட் சோப்பைத் தடவ வேண்டும்”

அனுவும் பிண்டு சொன்னபடியே செய்தாள்.

“அனு, இப்ப மெதுவா அந்த அட்டையை தண்ணீர் ட்ரேயில் அலுங்காமல் குலுங்காமல் வை பார்க்கலாம்”.

அனு அது போல் அந்த அட்டையை வைத்த அடுத்த நொடியே, ‘விஷ்க்க்’ என்று அந்த அட்டைப் படகு தண்ணீரில் வேகமாக சென்றது.

“வாவ் பிண்டு! இது என்ன மேஜிக்? எனக்கு ஒண்ணுமே புரியலையே!” என்று சோகமாக சொன்னாள் அனு.

“இதுக்கெல்லாம் கவலைப்படலாமா? அப்புறம் நான் எதுக்கு இருக்கேன், இந்த மேஜிக்கின் காரணம், ‘மேற்பரப்பு பதற்றம்’ அல்லது ‘மேற்பரப்பு அழுத்தம்’ அதாவது ஆங்கிலத்தில் சர்ஃபேஸ் டென்ஷன் என்று சொல்லுவோம்.

“இன்னும் விளக்கிச் சொல்லு பிண்டு, நானே குட்டி பாப்பா, எனக்கும் புரியணும்ல!” என்று பாவமாகக் கூறினாள் அனு.

“சொல்றேன் அனுக்குட்டி! தண்ணீர் மேல எப்போதும் மேற்பரப்பு அழுத்தம் இருக்கும். அதுக்குப் பேரு தான் சர்ஃபேஸ் டென்ஷன். நம்ம படகோட பின்புறம் தடவிய சோப்பு, தண்ணீரில் படும் போது அங்குள்ள மேற்பரப்பு அழுத்தம் குறையும். இதனால் படகின் முன்புறம்  உள்ள மேற்பரப்பு அழுத்தம் அதிகமாகி, அது படகை முன்புறமாக இழுத்துட்டுப் போகுது. இதனால் தான் படகு முன்னோக்கி வேகமாக போகுது”.

“அப்ப இந்த படகு நிக்காம ஓடிக்கிட்டே இருக்குமா பிண்டு?”.

“இல்ல அனு, சில நொடிகள் தான் ஓடும்.. அதுக்குள்ள சோப்பு, தண்ணீரில் முழுசா கரைந்து போகும். நீ அடுத்த முறை படகு விடணும்னா ட்ரேயில் உள்ள தண்ணீரைக் கொட்டிட்டு, புதுத் தண்ணீரைத் தான் நிரப்பணும் சரியா?”

அனு, “ம்ம்! சரி சரி பிண்டு, நான் இப்பவே இதை என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் போய் சொல்றேன்”

“இரு, இரு, அறிவியல் உண்மைகளைக் கேட்டுட்டுப் போ” என்று பிண்டு அறிவியல் உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தது.

அறிவியல் உண்மைகள்:

இந்த மேற்பரப்பு அழுத்தத்தை நாம் எங்கெல்லாம் காண்கிறோம்?

1. சிறிய வகை பூச்சிகள், தண்ணீரின் மேல் உள்ள மேற்பரப்பு அழுத்தத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அதன் மேல் நடக்கிறது.

2. சோப்புத் தண்ணீரில் அழுக்குத் துணிகளை ஊற வைக்கும் போது, சோப்பானது தண்ணீரின் மேற்பரப்பு அழுத்தத்தைக் குறைத்து, துணி இழைகளுக்குள் தண்ணீரைக் கொண்டு சென்று அழுக்குகளைக் களைகிறது.

3. இந்த மேற்பரப்பு அழுத்தத்தை பயன்படுத்தி, பெண் கொசுக்கள் அதன் முட்டைகளை மிக எளிதாகக் குளம், குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரின் மேல் போட்டு விட்டுச் செல்கின்றன.

பிண்டு: “உங்களுக்கு மேலும் ஏதாவது உதாரணம் தோன்றுகிறதா குட்டீஸ்? யோசிக்கிறீங்களா! வெரிகுட் வெரிகுட்”.

அனு:  “இந்த செய்முறையை மறக்காம செஞ்சு பார்த்து, எங்களுக்கு உங்கள் அனுபவங்களை அனுப்புங்கள் குட்டீஸ்”.

இன்று நாம் புதிதாக தெரிந்து கொண்ட விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!

  • சோப்பு – வழலை / வழலைக் கட்டி
  • சர்ஃபேஸ் டென்ஷன் – மேற்பரப்பு அழுத்தம்

“அடுத்த மாதம் இன்னொரு சுவாரஸ்யமான செய்முறையோட உங்களை சந்திக்கிறேன் பாய்! டாட்டா!”

“நானும் டாட்டா!” என்று பிண்டுவுடன் அனுவும் வேகமாக ஓடிப் போனாள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments