முன்னொரு காலத்தில் இரத்தினபுரி என்ற குட்டி தேசம் இருந்தது. அந்த தேசத்தைச் சுற்றித் தான் நமது கதை நகரப் போகிறது.

இரத்தினபுரியின் அரசன் வீரமகேந்திரன். பட்டத்தரசி எழினி. மக்கள் நலனில் அதிக அக்கறை காட்டி நாட்டைப் பரிபாலிக்கும் அரசர். அவர் மனதுக்கேற்ற அரசி எழினி. . நாட்டு மக்களைத் தங்களுடைய குழந்தைகளாகவே பாவிக்கும் கருணை உள்ளம் கொண்ட தாயாகவே பட்டத்தரசி இருந்தாள். மக்கள் உள்ளங்களில் தனது அன்பால் ஆட்சி செலுத்தினாள்.

நாட்டு மக்களைப் பொறுத்த வரையில் தங்களுடைய அரசரையும், அரசியையும் தாங்கள் வழிபடும் இறைவனும் இறைவியுமாகவே கருதி நாட்டு மக்கள் அவர்களைப் போற்றி வந்தார்கள்.

அந்த நாட்டின் எல்லைப்புறத்தில் அழகான சிறிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் ஒரு விவசாயியின் குடும்பம் இருந்தது. தங்களிடம் இருந்த சிறிய அளவிலான நிலத்தில் விவசாயம் செய்து தங்களுடைய உபயோகத்திற்குப் போக மீதமிருந்த நெல்லையும் மற்ற தானியங்களையும் குறைந்த விலைக்குச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.

விவசாயிகள் தானே நாட்டிற்கே உணவளிக்கும் தெய்வங்கள்?அவர்களுடைய உழைப்பு இல்லையேல் உணவுத் தட்டுப்பாடு வந்து விடுமே! அந்தக் காலத்தில் நீர்வளத்திற்குக் குறைச்சல் இருந்ததில்லை. வற்றாத நதிகள் நாட்டில் ஓடிக் கொண்டிருந்தன‌. அதைத் தவிர பருவமழையும் பொய்க்காமல் பெய்து வந்ததால் தண்ணீர்ப் பற்றாக்குறை வந்ததில்லை.

பொன்னன், பொற்கிளி என்ற அந்த விவசாயத் தம்பதிக்கு துருவன் என்ற ஒரே மகன். அன்பையும் கனிவையும் ஊட்டி வளர்த்தார்கள். கோகுலத்துக் கண்ணன் போலவே தனது குண்டுக் கன்னங்களையும் கருவண்டு விழிகளையும் குறும்புத்தனமான சேட்டைகளையும் கொண்டவன். அனைவரையும் மயக்கித் தன் பக்கம் இழுத்து விடும் மாயவனாகவே துருவன்  வளர்ந்து வந்தான்.

அந்த மாயக் கண்ணனைப் போலவே குழல் வாசிப்பதிலும் சிறந்தவன். தானாகவே கற்றுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்துத் தொடர்ந்து வாசித்து வந்தான். அவனுடைய குழலோசைக்கு மயங்காதவர் யாருமே அந்த கிராமத்தில் இல்லை.

மூங்கிலினால் ஆன அந்தக் குழலில் இருந்து கிளம்பும் இனிய இசை கேட்போரை உருக்கி உள்ளத்தில்  ஊடுருவி உயிரில் கலந்து விடும் படியாக இருந்தது.

கிராமத்து மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள். விவசாயம் என்றால் தானியங்கள் மட்டுமல்லாமல் காய்கறிகள் மட்டும் பழங்களும் சேர்த்து விளைவித்து வந்தார்கள்.

அதைத் தவிர அருகிலிருக்கும் மலைப் பகுதிக்குச் சென்று தேனையும் சேகரித்து வந்தார்கள். சிலர் தங்களிடம் இருந்த ஆநிரைகளை மேய்த்து வந்தார்கள்.

பகல் நேரத்தில் கிராம மக்கள் வயல்களில் மற்றும் தோட்டங்களில் வேலை செய்வார்கள். சிலர் புற்கள், இலை தழைகள் கிடைக்கும் இடத்தில் ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களுடைய ஊரின் எல்லையில் ஒரு மலையும், மலையடிவாரத்தில் வனமும் இருந்தன. அருகில் ஆறு ஒன்று தெளிந்த நீருடன் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த வனம் முடியும் இடத்திலிருந்து ஆற்றங்கரை வரை கொஞ்சம் சரிவாக இருக்கும் நிலத்தில் அழகான பசுமையான புல்வெளி. ஆங்காங்கே பெரிய நிழல் தரும் மரங்கள். அங்கே தான் ஆநிரைகளைப் புல் மேய அழைத்து வருவார்கள்.

அருகிலேயே தான் வயல்களும் இருந்தன. வயல்களில் பெரியவர்கள் வேலை செய்வார்கள். பெரும்பாலும் சிறுவர்கள் ஆநிரை மேய்த்துக் கொண்டு ஓடி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அந்த வயல்களுக்கும் புல்வெளிக்கும் நடுவில் ஒரு மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு துருவன் குழலூதுவான்.

இல்லையென்றால் மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு,  தனது குழலை ஊதி இனிமையான இசையை அந்த இடத்தில் பரப்பிக் கொண்டிருப்பான். மனிதர்கள் மட்டுமல்லாமல் ஆநிரைகளும், அந்த இடத்தில் இருந்த மரம் செடி கொடிகளுமே இசையில் மயங்கிக் கிறங்கிப் போய் நிற்கும். அந்த இடத்தில் வீசும் காற்று கூட இசையின் இனிமையைத் தன்னுள் சுமந்து கொண்டு தென்றலாகத் தான் அனைவரையும் வருடும்.

துருவனுக்கு இயற்கையிலேயே மற்றவர்களுக்கு உதவும் குணம் உண்டு. அவனுடைய பெற்றோரின் பண்பு அவனிடம் சற்று அதிகமாகவே இருந்தது. எங்காவது யாருக்கேனும் துன்பம் என்று தெரிந்தால் உடனே சென்று உதவும் குணம் அவனுக்கு உண்டு.

ஒருநாள் பகல் நேரத்தில் தாங்கள் காலையில் வீட்டில் இருந்து கிளம்பிய போது கட்டிக் கொண்டு வந்த உணவை உண்டார்கள். அதற்குப் பின்னர் மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஏழெட்டுப் பேர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது தங்களுடைய அரசர், அரசியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“பாவம் நம்முடைய அரசரும் அரசியும். இளவரசியைத் தொலைத்து விட்டு வருத்தத்தில் தவிக்கிறார்கள். அவர்களுடைய துயரம் தீர்க்க யார் தான் முன்வரப் போகிறார்களோ தெரியவில்லை. ஆண்டவனின் தூதுவனாக யாராவது வந்தால் தான் சரியாக இருக்கும்” என்று பொன்னன் சொல்ல, அதைக் கேட்டு மற்றவர்கள் வருத்தத்துடன் தலையசைத்தார்கள்.

பதின் பருவத்தில் இருந்த துருவனுக்கு அவர்களுடைய சொற்களைக் கேட்டு ஆச்சர்யமாக இருந்தது. அந்த வயதுக்கே உரிய ஆர்வம் அரச குடும்பத்திற்கு அப்படி என்ன துயரம் ஏற்பட்டிருக்கும் என்று தெரிந்து கொள்ளத் தூண்டியது.

பொன்னனைப் பார்த்துக் கேட்டான்.

“இளவரசிக்கு என்ன நேர்ந்தது? எப்படித் தொலைந்து போனார்கள்? அதனால் தான் அரசரும் அரசியும் துயரத்தில்  தவிக்கிறார்களா?” என்று கேட்க, அவனுடைய தந்தையும் சொல்ல ஆரம்பித்தான்.

malaikottai

“நம்முடைய நாட்டின் எல்லையில் ஒரு பெரிய மலை அரணாக இருக்கிறது.

அந்த மலையின் உச்சியில் ஒரு கொடிய மாயாவி இராக்ஷஸனின் கோட்டை இருக்கிறது. மாயாஜாலங்களும் மந்திர தந்திரங்களும் கற்று எல்லோரையும் அந்த மாயாவி துன்புறுத்தி வந்தான். அவனுடைய கோட்டையில் தனது மந்திர சக்தியால் பல்வேறு புதிய விலங்குகளையும் சாதனங்களையும் உருவாக்கிக் கோட்டையை  அதிக வலிமையாக்கி வைத்திருக்கிறான். அவனுடன் நேருக்கு நேர் போர் செய்து யாராலும் தோற்கடிக்க முடியாது. அவன் ஒருமுறை தனது கோட்டையில் இருந்து இறங்கி வந்து எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து குழந்தைகளைக் கடத்திப் போக ஆரம்பித்தான். அவர்களைத் தனது கோட்டைக்குக் கொண்டு சென்று பயிற்சி கொடுத்துத் தனக்கு அடிமைகளாக மாற்றி வைத்திருக்கிறான். கிராமத்து மக்கள் குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டுத் தவித்தார்கள். தங்களுடைய நாட்டின் அரசரிடம் சென்று முறையிட்டார்கள். அரசரும் அவர்களுக்கு உதவி செய்வதற்காகத் தனது படையுடன் எல்லைப்புறத்தில் இருந்த மலைக் கோட்டைக்கு வந்து சேர்ந்தார். போரை ஆரம்பிப்பதற்கு முன்னால் அந்த மாயாவிக்குத் தூது அனுப்பினார். அது தான் அந்தக் கால நடைமுறை. எந்த யுத்தமும் ஆரம்பிப்பதற்கு முன்னால் எதிரிக்குத் தூது அனுப்பிப் பேச்சு வார்த்தை நடத்துவார்கள். போரை எப்படியாவது தவிர்க்க முடியுமா என்ற முயற்சி. அந்தத் தூதுவனின் ஓலையைப் படித்து விட்டு அந்த மாயாவி இராக்ஷஸனும் அரசரிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இறங்கி வந்தான்.

அரசரைப் பார்த்து அவன் சொன்னான்,

“நீங்கள் எத்தனை முறை போருக்கு வந்தாலும் எத்தனை நாட்கள் என்னோடு போர் செய்தாலும் என்னை நீங்கள் யுத்தத்தில் ஜெயிக்க முடியாது. எனது வலிமை மிகவும் அதிகம். உங்களுடைய வீரர்களை நான் நினைத்தால் இந்த நிமிடமே அழித்து விடுவேன். அதனால் என்னுடன் சமரசம் செய்து கொண்டு போய் விடுங்கள்” என்று சொல்ல, அரசர் அவனிடம்,

“உன்னோடு நான் எப்படி சமரசம் செய்து கொள்ள முடியும்? நீ என்னுடைய மக்களின் குழந்தைகளைக் கவர்ந்து சென்று விட்டாயே! அவர்கள் எல்லோரையும் உன்னிடமிருந்து விடுவிக்கும் வரை நான் உன்னுடன் யுத்தம் செய்வேன். எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை. எனது மக்களின் துயரத்தைத் துடைப்பது அரசனாகிய எனது கடமை” என்று சொன்னார்.

அவன் உடனே சத்தமாகச் சிரித்து விட்டு பதில் சொன்னான்,

“நீங்கள் ஒரு நல்ல அரசர் தான் . உங்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உங்களுடைய இந்த நல்ல குணத்தைக் கண்டு உங்களுக்காக எனது மனம் இரங்குகிறது. அதனால் நான் ஒரு வழி சொல்கிறேன். நீண்ட நாட்கள் யுத்தம் செய்வதால் உங்களுக்கும் நேரம் வீணாகும். நிறைய வீரர்களின் உயிர்களையும் நீங்கள் பலி கொடுக்க வேண்டி இருக்கும். எனக்கும் அதிக நாட்கள் யுத்தம் செய்வதால் நேரம் வீணாகும். அதனால் உங்களுடன் சமாதானம் செய்து கொள்ள நான் உடன்படுகிறேன். ஒரே ஒரு நிபந்தனை. அதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நான் ஏற்கனவே பிடித்து வைத்திருக்கும் குழந்தைகளைத் திருப்பிக் கொடுத்து விடுவேன்.  இனிமேல் வேறு குழந்தைகளையும் தூக்கிச் செல்ல மாட்டேன் என்று உங்களுக்கு ‌உறுதி தருகிறேன். இனி என்னுடைய தொந்தரவு உங்கள் நாட்டிற்கு எப்போதும் இருக்காது. ஆனால் நான் கேட்பதை நீங்கள் எங்களுக்குத் தரவேண்டும்.ஒத்துக் கொள்கிறீர்களா?”

என்று கேட்க,

அரசரும், “அப்படி என்ன நிபந்தனை? எனக்கு நீ சொல்லு பார்க்கலாம்”

என்று சொல்ல அந்த மாயாவி சிரித்தான்.

“உங்களுடைய மகளை அதாவது இந்த நாட்டின் இளவரசியை என்னிடம் நீங்கள் ஒப்படைக்க வேண்டும். பயப்பட வேண்டாம். இளவரசியின் உயிருக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் உங்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து  விடுவார். நீங்களே யோசித்து முடிவெடுங்கள். உங்கள் முடிவைக் கேட்க நான் காத்துக் கொண்டு இருக்கிறேன்”

என்று சொல்ல, அரசரின் படைவீரர்களும் நாட்டு மக்களும் வெகுண்டெழுந்தனர்.

சேனாதிபதி உடனடியாக வாளை உருவினான். வெகுண்டெழுந்த அவனை அரசர் தடுத்தார்.

“எனக்கு ஒரு நாள் அவகாசம் தருகிறாயா? குழந்தையிடம் என்னைப் போலவே அவளுடைய தாய்க்கும் உரிமை இருக்கிறது. அவளிடமும் கலந்து பேசி விட்டு முடிவைச் சொல்கிறேன்”

என்று சொல்ல, மாயாவியும் சரியென்று ஒத்துக் கொண்டான்.

“ஒரு நாள் அல்ல. ஒரு வாரம் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களுக்குப் பிறகு இதே மலை அடிவாரத்தில் உங்களைச் சந்திக்கிறேன்” என்று சொல்லி விட்டு மறைந்து போனான்.

அரசர் கனத்த இதயத்துடன் தனது படைகளை அங்கேயே நிறுத்தி விட்டுத் தான் மட்டும் தனது புரவியில் ஏறி அரண்மனைக்குத் திரும்பினார்.

அரசியிடமும் முதன் மந்திரியிடமும் தனது இராஜகுருவுடனும் கலந்து பேசிய பின்னர் இளவரசியைத் தியாகம் செயய முடிவு செய்து விட்டார். தனது நாட்டு மக்களின் நலனுக்காகத் தனது குழந்தையை இழக்க நமது அரசர் துணிந்து விட்டார்.”

என்று சொல்லி முடித்தான் பொன்னன்.

நிறைய சந்தேகங்கள் நமது துருவனின்  மனதில் எழுந்தன.

…தொடரும்

மாயாவியின் நிபந்தனைக்கு ஏன் அரசர் ஒத்துக் கொண்டார் ? துருவன் உண்மைகளைத் தெரிந்து கொண்ட பின்னர் இளவரசியை மீட்டு வரக் கிளம்பிப் புறப்பட்டுப் போவானா? ஒரு மாயாவியின் முன்னே துருவனால் சாகசங்கள் செய்ய முடியுமா?

அடுத்த பகுதியில் பார்க்கலாம் செல்லங்களே!
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
3 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments