திரு. கபிலன் காமராஜ் அவர்கள்

என் சிறு வயது காலத்தை கால்பந்து விளையாடுவதிலும் புத்தகம் படிப்பதிலும் தான் அதிக நேரம் செலவிட்டிருப்பேன். கால்பந்து விளையாட வீட்டைச் சுற்றிப் பெரிய பெரிய திடல்கள் இருந்தன. பள்ளியிலும் மிகப்பெரிய விளையாட்டுத் திடல் இருந்தது. புத்தகம் வாசிக்க அம்மா வாங்கித் தரும் காமிக்ஸ்கள் மட்டுமல்லாது பள்ளியின் நூலகத்திலும், மாவட்ட நூலகத்தின் குழந்தைகள் பிரிவிலும் பல புத்தகங்கள் இருந்தன. பள்ளியில் சிறு இடைவேளை கிடைத்தாலும் நூலகத்திற்கு ஓடிச் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். மாலை வீடு வந்ததும் பந்தைத் தூக்கிக் கொண்டு திடலுக்குச் சென்றுவிடுவேன்.  

வருடங்கள் கடந்து வளர்ந்து, ஸ்வீடனுக்கு குடிபெயர்ந்த பின்னர், இங்கே ஒரு தமிழ் நூலகம் துவங்க நண்பர்களுடன் சேர்ந்து முயற்சி மேற்கொண்டேன். ஒரு விடுமுறையில் இந்தியா வந்த பொழுது நூலகத்திற்கான நூல்களை சேகரிக்கத் துவங்கிய போதுதான் ஒரு கள எதார்த்தம் விளங்கிற்று. நான் சிறு வயதில் படித்த தமிழ் காமிக்ஸ் பதிப்பாளர்கள் இயங்குவதில்லை. தமிழ் காமிக்ஸ் புத்தகங்களே கிடைப்பது அருகியிருந்தது. விளையாட்டுத் திடல்களும் சுருங்கி இருந்தன. புதிய குடியிருப்பு பகுதிகளில் பூங்காவையோ விளையாட்டுத் திடலையோ காண்பதரிது.

பெரியவர்கள் வாசிக்கும் சிறுகதைகள், புதினங்கள் எளிதாக கிடைக்கும் அதே வேளையில் குழந்தைகள் வாசிக்கும் தமிழ் புத்தகங்கள் மிகச் சொற்பமாகத் தான் சந்தையில் கிடைக்கும் நிலை. தேடித் தேடி வாங்கியதில் என்னால் 250 சிறார் நூல்களைத் தான் தமிழில் பெற முடிந்தது, அதில் பாதி மொழி பெயர்ப்பு நூல்கள். தமிழ் மொழியை இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் நாம் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டுமெனில் அச்சுப் பதிப்புகள் தாண்டி மின்னூல்களாகவும் பதிப்பிக்க வேண்டும்.

திராவிட வாசகர் வட்டம் நடத்திய அறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டிக்கு அமேசான் கிண்டிலில் புத்தகங்கள் பதிப்பித்த ஆசிரியர்கள் ஒன்று கூடி ‘பூஞ்சிட்டு’ எனும் சிறார்களுக்கான மின்னிதழை உருவாக்குவதைக் காண்பதில் பெருமகிழ்ச்சி. குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க இது போன்ற முயற்சிகள் வெற்றி பெற்றால் தமிழ் மொழி கால வெள்ளத்தைக் கடந்து வளரும் என்பதில் ஐயமில்லை.

விதை விருட்சமாக வாழ்த்துகள் !!!

– கபிலன் காமராஜ்

Pages: 1 2

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments